100 நாட்களை எட்டியும் தீர்வின்றித் தொடரும் போராட்டங்கள்

கேப்பாபுலவு மக்களின் தொடர் போராட்டம் இன்றுடன் 117ஆவது நாளை எட்டியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கூடாரம் அமைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம், தீர்வின்றிய நிலையில் தொடர்கின்றது.

138 குடும்பங்கள், தமக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்தத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

கடந்த 2008ஆம் ஆண்டு, சொந்த நிலங்களில் இருந்து வெளியேறிய மக்கள், இதுவரை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. எனினும் தமது காணி விடுவிப்பு தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் கொடுத்த வாக்குறுதிகளும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம், இன்று 126ஆவது நாளாக இடம்பெற்று வந்தது.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று, 110ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.

மேலும், வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக இடம்பெற்று வரும் போராட்டம்இ இன்று 122ஆவது நாளை எட்டியுள்ளது.

எனினும், இப்போராட்டங்களுக்கு எவ்வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில், மக்கள் வெவ்வேறு முறைகளில் தமது போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.