அண்மையில் வடமாகாணத்தில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்ப நிலைக்கு தென்னிலங்கையிலேயே சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
எனினும், குறித்த விடயம் தொடர்பில் பேசுவதை வடக்கு முதலமைச்சர் தற்போது தவிர்த்து வருவதாக ஆங்கில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அண்மையில், வடமாகாணத்தில் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் “என்னை பதவியிலிருந்து நீக்குவதற்கு தென்னிலங்கையிலிருந்தே சதித்திட்டம் தீட்டப்பட்டதாக” தெரிவித்திருந்தார்.
தற்போது வடக்கில் ஏற்பட்டிருந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விஷேட செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார்.
இதன்போது, “உங்களை பதவியிலிருந்து நீக்குவதற்கான சதி கொழும்பில் தீட்டப்பட்டதாக தெரிவித்தீர்கள். எனினும், அரசாங்கத்தின் தலையீடுகள் இன்றியே கூட்டமைப்பு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது.
இந்த நிலையில், உங்களை பதவியிலிருந்து நீக்குவதற்கான சதி இடம்பெற்றதாக இன்னமும் நினைக்கிறீர்களா?” என கேள்வி ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்து பேசிய வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் “சமரசம் தொடங்கியுள்ள போது, பிரேத பரிசோதனை போன்ற விடயங்களைத் தவிர்க்க வேண்டும்” என பதில் வழங்கியுள்ளார்.