ஜனாதிபதி தேர்தலில் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்: எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு மீரா குமார் கடிதம்

ஜனாதிபதி தேர்தலில் மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு வேண்டுகோள் விடுத்து மீரா குமார் கடிதம் எழுதியுள்ளார்.

புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 17-ந் தேதி நடைபெறுகிறது. இதில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பீகார் முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகளின் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீரா குமாரும் போட்டியிடுகின்றனர்.

பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், மீரா குமார் நாளை மறுநாள் (28-ந் தேதி) தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என தெரிகிறது. அதற்கு முன்னதாக அவர் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டு உள்ள அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியா, காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக நடந்த போராட்டம் மற்றும் சாதி கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டங்களில் அதிர்ஷ்டவசமாக நானும் பல்வேறு வழிகளில் இணைந்திருந்தேன். இந்த இரு போராட்டங்களும் என் உணர்வுகள், எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.

எனது பொதுவாழ்வில், நமது தேசத்தந்தைகள் தங்கள் அரசியல் தொடர்புகளை பொருட்படுத்தாமல் ஏற்படுத்திய உதாரணங்களால் ஈர்க்கப்பட்டேன்.

ஜனாதிபதிகள் பதவி பிரமாணம் ஏற்கும் போது, இந்திய ஜனநாயகத்தின் முதுகெலும்பாகிய அரசியல் சாசனத்தை காக்கவும், அதை சார்ந்து செயல்படவும் வாக்களிக்கிறார்கள். சட்டங்கள் இயற்றுவதற்கு இறுதி உரைகல்லாக ஜனாதிபதி அலுவலகத்தையே அரசியல் சாசனம் அங்கீகரித்து இருக்கிறது.

எனவே ஜனாதிபதி பதவியை குறுகிய அரசியல் நலன்களுக்காக பயன்படுத்த முடியாது. ஆகவே ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் (எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்) அனைவரும் உங்கள் மனசாட்சிப்படி வாக்களியுங்கள்.

இவ்வாறு அந்த கடிதத்தில் மீரா குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.