கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற 100 பௌத்த பிக்குகள் இரத்த தானம் செய்துள்ளனர்.
யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் காணப்படும் இரத்த வங்கிகளில் கடுமையான இரத்தத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதனை நிவர்த்தி செய்யும் நோக்கில் கொழும்பிலிருந்து நேற்று சுமார் 100 பௌத்த பிக்குகள் யாழ்ப்பாணம் சென்று, இரத்த தானம் செய்துள்ளனர்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ மாநாயக்கத் தேரரின் தலைமையில் இந்த பௌத்த பிக்குகள் குழுவினர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு சென்றிருந்தனர்.
ஊடகங்களின் ஊடாக இரத்தப் பற்றாக்குறை காணப்படுவதாக அறிந்து கொண்டு இவ்வாறு இரத்ததானம் செய்ய வந்ததாக மெகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
அனைத்து உயிர்களும் துக்கமின்றி இருக்க வேண்டும், நோய்கள் இன்றி இருக்க வேண்டும் என்ற பௌத்த மத கொள்கையின் அடிப்படையில் இரத்த தானத்தில் தாம் பங்கேற்றதாகத் தெரிவித்துள்ளார்.
நோய் வாய்ப்பட்ட ஒருவருக்கு உதவி வழங்குவதற்கு அவரது இனம், மதம், குலம் அவசியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.