இலங்கைக்கான கடனுதவியை இரத்துச்செய்யப்போவதாக உலக வங்கி எச்சரிக்கை!!

கணக்காய்வு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாதுவிடத்து எதிர்வரும் செப்டெம்பரில் இலங்கைக்கு வழங்கவுள்ள 100 மில்லியன் டொலர்கள் கடனுதவியை இடைநிறுத்தப்போவதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

இலங்கையின் குடிநீர் குழாய்பொருத்து திட்டத்துக்காக உலக வங்கி 100 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது கணக்காய்வு சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உலக வங்கியின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். எனினும் அது கடினமான காரியம் என்று இலங்கையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உயர்மட்ட பிரமுகர் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையால், இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாமல் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது குறித்த கருத்து தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்ட உலக வங்கியின் அதிகாரிகள், அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படாவிட்டால், இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 100 மில்லியன் டொலர் நிதியுதவியை இரத்துச்செய்யப்போவதாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.