புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாலூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது தளிஞ்சி என்ற ஊர். இங்கு அகஸ்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இறைவன் பெயர் அகஸ்தீஸ்வரர், இறைவி பெயர் அகிலாண்டேஸ்வரி அம்மன். கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்தத் திருக்கோவில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
கோவிலின் முகப்க் கடந்தவுடன் அகன்ற பிரகாரம் உள்ளது. நாகர், நந்தி, பலி பீடம் இவைகளைக் கடந்ததும், மகாமண்டபம் உள்ளது. மகா மண்டப நுழை வாசலில் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானும் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தின் வலது புறம் இறைவி அகிலாண்டேஸ்வரி அம்மனின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் முகத்துடன் வீற்றிருக்கிறாள்.
அடுத்துள்ள அர்த்த மண்டபத்தைக் கடந்து சென்றால், கருவறையில் லிங்கத்திருமேனியுடன் காட்சிதரும் அகஸ்தீஸ்வர சுவாமியை தரிசனம் செய்யலாம். இறைவனின் ஆவுடையார் பூமியில் இரண்டு மீட்டர் ஆழத்திற்கும் கீழ் பதிந்துள்ளதாக கூறப்படுகிறது. இறைவனின் முக அமைப்பு யாளியின் உருவத்தில் அமைந்துள்ளது. இறைவனின் வலது புறம் சிரசில் 15 செ.மீ அளவில் வடு ஒன்றும் காணப்படுகிறது.
இறைவனின் தேவக் கோட்டத்தின் தென்புறம் தட்சிணா மூர்த்தியும், மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கில் துர்க்கையம்மனும், கிழக்கில் ஜேஷ்டா தேவியும் அருள் பாலிக்கின்றனர். இறைவியின் தேவக் கோட்டத்தில் மேற்கே வைஷ்ணவி தேவியும், வடக்கில் பிராம்ஹி தேவியும், கிழக்கே மகேஸ்வரியும் உள்ளனர். பிரகாரத்தில் வடக்கில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர்.
மன்னனின் கதை :
இந்தப் பகுதியை ஆட்சி செய்த கம்பராஜா என்ற மன்னன் சிறந்த சிவ பக்தன். சிவபூஜை செய்யாமலோ அல்லது சிவாலயத்தை தரிசிக்காமலோ இரவு உண்ணமாட்டான். ஒருமுறை புதுக்கோட்டையிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த வழியில் இருந்த ஒரு கிராமத்தை அடைந்த போது இருட்டி விட்டது. அந்த ஊரில் கோவில் எங்குள்ளது என்று மன்னனுக்கோ, அவனுடன் வந்தவர்களுக்கோ தெரியவில்லை. ஊரில் இருந்த சிலரும் வீட்டுக்குள் முடங்கிவிட்டனர்.
‘யாரைக் கேட்பது?’ மன்னனுக்குப் புரியவில்லை. சுற்றிலும் பார்த்தபோது, சற்றுத் தொலைவில் ஓர் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கை நோக்கி நடந்த மன்னனுக்கு, அந்த கரிய இருளில் நடைபாதை பிடிபடவில்லை.
எனவே இது இறைவனின் ஆலயமாகத் தான் இருக்க வேண்டும் என்று எண்ணிய மன்னன், தரையில் விழுந்து சாஷ்டாங்கமாக அந்த விளக்கு இருந்த இடத்தை நோக்கி வணங்கினான். சிவ தரிசனம் முடிந்த திருப்தியில் இரவு உணவை உண்டுவிட்டு உறங்கத் தொடங்கினான். பொழுது விடிந்தது. காலையில் நீராடிவிட்டு, இரவு வணங்கிய அகல் விளக்கு இருந்த இடத்தை நோக்கி நடந்தான்.
அந்த இடத்தை அடைந்த மன்னனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவேயில்லை. அது இறைவனின் ஆலயமல்ல.. ஒரு தாசியின் வீடு. தனது வாடிக்கையாளர்களுக்கு இடம் தெரிய வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அடையாளச் சின்னம் தான் அந்த அகல் விளக்கு என்ற உண்மை தெரிந்து மன்னன் வேதனைப்பட்டான்.
சிவாலயம் என எண்ணி ஒரு தாசிவீட்டை வணங்கியதால் தான் தீராத தோஷத்துக்கு ஆளாகிவிட்டதாக மனம் புழுங்கினார். அதே வேதனையோடு அந்த ஊரில் இருந்த சிவாலயத்தை தேடிச் சென்றார். இறைவனிடம் தன் தோஷத்தை தீர்த்து வைக்கும்படி மன்றாடினார். இறைவனை வழிபட, வழிபட மன்னனின் மன வருத்தம் மறைந்து மகிழ்ச்சி குடிகொண்டது. இதையடுத்து அந்தக் கிராமம் முழுவதையும் இறைவனின் ஆலயத்திற்கு தானமாக வழங்கினான் அந்த மன்னன் என்பது செவிவழி செய்தியாகும். அது முதல் அந்த கிராமம் ‘கம்ப ராஜபுரம்’ என்றே அழைக்கப்படலாயிற்று.
கம்பராஜபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரின் தற்போதைய பெயர் ‘தளிஞ்சி’ என்பதாகும். ஏன் இந்த பெயர் மாற்றம்?. இதற்கும் அரவான் ஆலயத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதுவும் ஒரு செவி வழி கதைதான்.
கம்பராஜபுரத்தில் இருந்த ஆலயத்தில் பணிபுரிந்த ஒரு இளைஞன், அடுத்து இருந்த ஒரு கிராமத்தில் வசித்த ஒரு பெண்ணை காதலித்தான். யாருக்கும் தெரியாமல் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு கம்பராஜபுரம் அழைத்து வந்தான். பெண்ணின் உறவினர்கள் வசதியானவர்கள் மட்டுமல்ல; வலிமையானவர்கள்.
தங்கள் வீட்டுப் பெண்ணை கவர்ந்து சென்ற இளைஞனின் குடும்பத்தையே வெட்டிச் சாய்த்தனர். உறவினர் அனைவரும் இறந்த நிலையில் தாயம்மா என்ற கர்ப்பிணி பெண் மட்டும் தப்பிப் பிழைத்து தன் தாய்வீடான புதுக்கோட்டைக்குச் சென்று விட்டாள். அகஸ்தீஸ்வரரின் தீவிர பக்தையான அவளுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. இருபது ஆண்டு காலம் ஓடியது. தான் வாக்கப்பட்ட பூமியையும், தன் இஷ்ட தெய்வமான அகஸ்தீஸ்வரரையும் தரிசிக்க விரும்பிய தாயம்மா கம்பராஜபுரம் வந்தாள். தன்னுடன் இரண்டு சேவல்களை எடுத்து வந்தாள்.
வழியில் ஒரு சேவல் பறந்து போய் ஓர் ஆல மரத்தின் மேல் அமர்ந்து கொண்டது. அந்த மரத்தடியில்தான் அரவான் காப்பு கட்டும் உற்சவம் இன்றும் நடக்கிறது. தன் இரு மகன்களுடனும், இன்னொரு சேவலுடனும் அகஸ்தீஸ்வரர் ஆலயம் வந்து அமர்ந்தாள் தாயம்மா. அங்கு வந்த ஊர் பெரியவர்களிடம் தாயம்மா தன் கதையை கூற அவர்கள் நம்ப மறுத்தனர்.
சிவபெருமானின் பக்தையான அவள் ‘நான் என்ன செய்தால் என்னை நம்புவீர்கள்?’ என்று கேட்டாள்.
அதற்கு ஊர் பெரியவர்கள் ‘அதோ இருக்கும் பட்டுப்போன புளியமரத்தை துளிர்க்க வைக்க முடியுமா?’ என்று கேட்க, தன் கையிலிருந்த சேவலை பறக்க விட்டாள் தாயம்மா. அது புளியமரத்தில் போய் அமர்ந்ததும் அந்த மரம் துளிர்த்தது. இதையடுத்து அவளை அந்த ஊரிலேயே வசிக்க ஊர் மக்கள் அனுமதித்தனர். அவள் தினமும் அகஸ்தீஸ்வரரை வணங்கி தன் இறுதி நாட்களை அங்கு கழித்தாள். பட்டுப்போன மரம் தழைத்து வளர்ந்ததால் கம்பராஜபுரம் என்ற அந்த ஊர், ‘தழைஞ்சூர்’ எனப் பெயர் மாறியது, பின் அதுவும் மருவி, தளிஞ்சி என அழைக்கப்படுகிறது.
அகஸ்தியரால் வழிபடப்பட்ட சிவபெருமான், இத்தல இறைவன் என்பதால் அவருக்கு அகஸ்தீஸ்வரர் என்று பெயர் வந்ததாக கூறுகிறார்கள். தினமும் இரண்டு கால பூஜைகள் நடக்கும் இந்த ஆலயத்தில், இறைவனுக்கோ, இறைவிக்கோ உற்சவ மூர்த்திகள் கிடையாது. எனவே, இறைவன்-இறைவி வீதியுலா வருவது கிடையாது.
நவராத்திரி, சிவராத்திரி, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, மார்கழி 30 நாட்கள் ஆகிய நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. ஐப்பசி மாத பவுர்ணமியில் இறைவனுக்கு மிகச் சிறப்பான முறையில் அன்னாபிஷேகம் நடக்கிறது.
தளிஞ்சி என்ற அந்த அழகிய கிராமத்திற்குச் சென்றால், அகஸ்தீஸ்வரர் ஆலயம், நல்லரவான் ஆலயம், வரதராஜப் பெருமாள் ஆலயம் என்று மூன்று ஆலயங்களையும் மனம் குளிர தரிசித்து விட்டு திரும்பலாம்.