குரு முழு சுப கிரகமாக இருப்பதால் ஜோதிட விதிப்படி அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் ஏற்படுகிறது. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது சிறப்பானது அல்ல.
இதை குறிப்பிடும் வகையில்தான் ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற பழமொழி ஏற்பட்டது. ஒருவரது ஜாதகத்தில் குரு
பகவான் நல்ல ஸ்தான ஆதிபத்யம் பெற்று ராசி, அம்சத்தில் பலம் பெற்று அமர்ந்து விட்டால் அந்த ஜாதகத்துக்கு அந்த ஒரு பலமே போதுமானது. கவுரவம்,
செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாக தேடி வரும். ஆன்மீக விஷயங்களில் ஜாதகரை ஈடுபட வைப்பார்.
மதபோதகர், மத பிரசாரகர், சொற்பொழிவாளர், கதா கலாட்சேபம் போன்றவற்றில் முன்னிலைப்படுத்துவார். கோயில் கட்டுதல், கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தி வைத்தல், அறங்காவலர் பதவி, தர்மஸ்தாபனம்அமைத்தல் போன்ற பாக்கியத்தை அருள்வார். தலைசிறந்த வக்கீல்களாகவும், நீதிபதிகளாகவும் இருப்பவர்கள் குருவின் பரிபூரண அருள் பெற்றவர்களே. கல்வித்துறை, நிதி, நீதித்துறைகள், வங்கி போன்றவற்றில் பணி செய்யக்கூடிய பாக்கியத்தை அருள்பவரும் குரு பகவானே.
பரிகாரம்: குரு பகவானின் பரிபூரண அருள் வேண்டுபவர்கள் அனைத்து முருகன் ஸ்தலங்களுக்கும் சென்று வணங்கலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக் கடலை சுண்டல் வழங்கலாம். கும்பகோணம் அருகில் ஆலங்குடி குரு பரிகார ஸ்தலத்தில் உள்ள குரு பகவானை வியாழக்கிழமைகளில் வணங்கினால் அவரது அருள் கடாட்சம் நிச்சயம் கிடைக்கும்.