ஆஞ்சநேயரை நினைத்தாலே எல்லா இடர்களும் நீங்கிவிடும்

ஸ்ரீ ராமர் சேது அணையைக் கட்டும்போது அனுமர் பெரிய பெரிய கற்களைத் தலைமேல் சுமந்து சென்று ஸ்ரீ ராம கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். அப்போது சனீஸ்வரர் அனுமரைப் பிடிக்க அங்கு வந்தார். அனுமர் என்னைத் தொந்தரவு செய்யாதே, நான் இப்போது ஸ்ரீராம காரியத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று கூறினார். சனீஸ்வரர் விடுவதாக இல்லை. உன்னை இப்போது பிடித்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னார்.

அனுமர் உடனே ஒப்புக்கொண்டு சனீஸ்வரரைத் தன் தலையில் அமரச் செய்தார். பின்பு கற்களை வழக்கம் போல் தூக்கித் தலைமேல் வைத்துக் கொள்ள சனிபகவான் கற்களுக்கு அடியில் நசுங்க ஆரம்பித்தார். தன்னை விடுவிக்குமாறு அனுமரை வேண்டினார்.

அனுமரும் மனமிரங்கி சனிபகவானை விடுவித்து, இனி ஸ்ரீ ராம பக்தர்களைத் தொந்தரவு செய்யாதே என்று கூறினார். சனி பகவானும் அனுமரை வணங்கி அவ்வாறே உறுதிமொழியும் அளித்தார். ஆஞ்சநேயரை நினைத்தாலே போதும் சனீஸ்வரரின் உபாதைகள் உங்களை விட்டு அகன்று ஓடிவிடும். எல்லா இடர்களும் நீங்கிவிடும் என்பது மிகவும் பிரசித்தமான விஷயம்.

ஆஞ்சநேயர் வழிபாடு செய்றீங்களா.. அவரை வணக்கிட்டு ஒரு நிமிடமாவது கோவிலில் அமர்ந்து அப்பறம்தான் வீட்டுக்கு கிளம்பனும்.