இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு பேசியதாவது:-
“தமிழ் பட உலகில் திறமையானவர்கள் இருக்கிறார்கள். உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நம்மிடம் இருக்கிறார். சிறந்த நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்களும் தமிழ் பட உலகில் இருக்கிறார்கள். சிறந்த தயாரிப்பாளர்களும் உள்ளனர். சினிமா எல்லாதரப்பு மக்களை யும் சென்று அடைகிறது.
தமிழ் சினிமா கலைஞர்கள் தங்கள் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். நமக்குள் வீண் சண்டை, சச்சரவுகள் வேண்டாம். அரசியல் பாகுபாடுகளும் வேண்டாம். தமிழ் திரையுலகினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மறைந்த நடிகர் முரளி மகன் அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். முரளி சிறந்த நடிகர். கடைசிவரை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரைப்போல் அதர்வாவும் சிறந்த நடிகராக உயர வேண்டும்.”
இவ்வாறு நாசர் பேசினார்.
விழாவில் டி.சிவா தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் ‘பார்ட்டி’ படம் பற்றிய முதல் தோற்றமும் வெளியிடப்பட்டது.