என் தந்தையின் அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன்: கவுதம் கார்த்திக்

சேலம் 5 ரோடு அருகே உள்ள தியேட்டரில் “இவன் தந்திரன்“ என்ற சினிமா படத்தின் டிரைலர், பாடல்கள் மற்றும் ரசிகர்கள் சந்திப்பு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கவுதம் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-

“இவன் தந்திரம்“ படம் வருகிற 30-ந் தேதி வெளியாகிறது. இந்த படம் வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்று வருகிறது.

என்ஜினீயரிங் படித்த மாணவர்களின் கதை தான் “இவன் தந்திரன்“. என்னுடன் நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் நடித்துள்ளார். காதல், காமெடி என எல்லோரும் பார்க்கும்படியாக படம் இருக்கும். மாணவர்கள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வாகவும் இருக்கும்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. நான் இப்போது தான் திரைத்துறையில் படங்கள் நடித்துக்கொண்டு இருக்கிறேன். 10 ஆண்டுகள் சென்ற பின்பு அரசியல் குறித்த கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பேன்.

என் தந்தை (நடிகர் கார்த்திக்) அரசியலில் இருந்தாலும், அவருடைய அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கமாட்டேன். பாகுபலி போன்ற தரமான படங்கள் வரும் போது பொதுமக்கள் தியேட்டரை நோக்கி வருவார்கள். தரமான படங்கள் தான் மக்களை ரசிக்க வைக்கும். திருட்டு வி.சி.டி.க்களை தடுப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இயக்குனர் கண்ணன், நான் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு போன்று வருவேன் என கூறுகிறார். அதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அந்த இடத்தை அடைவதற்கு நான் கடுமையாக உழைப்பேன். ரங்கூன் படம் போன்று “இவன் தந்திரம்“ படம் வெற்றியடையும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது படத்தின் வினியோகஸ்தர் தனஞ்ஜெயன், இயக்குனர் ஆர்.கண்ணன், தயாரிப்பாளர் ராம்பிரசாத், இணை தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக ரசிகர்கள் கவுதம் கார்த்திக்குடன் ஆர்வமாக ‘செல்பி‘ எடுத்துக்கொண்டனர்.