விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படத்திற்கு ‘மெர்சல்’ என்று தலைப்பு வைத்துள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தின் பாடல் பதிவுகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மெர்சல்’ படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். ஏற்கெனவே ‘ஜென்டில்மேன்’ படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடியிருந்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ரகுமான் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடல் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மெர்சல்’ படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளனர். அக்டோபர் மாதத்தில் படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது