வருடாந்தம் யூன்-26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டு வரும் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் போதைப் பொருளுக்கெதிரான கவனயீர்ப்புப் பேரணி இன்று திங்கட்கிழமை யாழ். நகரில் இடம் பெற்றது.
போதைப்பொருள் பாவனையை நாட்டிலிருந்து ஒழிக்க அணிதிரள்வோம் வாரீர்!’ எனும் தொனிப்பொருளில் யாழ். மத்திய பிரதான பேருந்துத் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய குறித்த பேரணி சுமார் ஒரு மணித்தியாலம் வரை அங்கு கவனயீர்ப்புப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்மேளனத் தலைவர் க.புஸ்பராசா தலைமையில் யாழ். முனீஸ்வரன் வீதி வழியாகப் போதை மற்றும் புகைத்தலுக்கெதிரான பல்வேறு பதாதைகளைக் கைகளில் தாங்கியவாறு சிறுவர், சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் யாழ். வீரசிங்கம் மண்டபத்தைச் சென்றடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து வீரசிங்கம் மண்டப முன்றலில் போதை சார்ந்த விழிப்புணர்வுரைகளும் இடம்பெற்றன.