பத்திரிகையில் வெளியான செய்திக்கு வட மாகாண முதலமைச்சர் மறுப்பு

‘காக்கைதீவு, சாவற்காட்டு பகுதிகளில் பொலிஸ் காவலரண்’ என்ற தலையங்கத்தில் ஊடங்களில் இன்று வெளியான செய்தி எம்மால் அனுப்பப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இன்று இவர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த மாதம் 31 ஆம் திகதி யாழ். காக்கைதீவு சாவற்கட்டு சந்தியில் வாலிபர்களின் அட்டகாசம் மிகவும் தொல்லையாக இருக்கின்றது என்று கூறி ஒரு கடிதம் கிடைத்தது.

இவ்வாறான கடிதங்கள் கிடைக்கும் போது அவற்றின் உண்மைத் தன்மையை அறிவதற்காக பொலிசாரிடம் அக் கடிதத்தைப் பாரப்படுத்தி விசாரணை கோருவது வழக்கம்.

அத்துடன், குறித்த விடயம் சம்பந்தமாகவும் அவ்வாறே சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அவர்களுக்கு கடிதம் என்னால் அனுப்பப்பட்டது.

ஒரு வேளை பத்திரிகையாளர் ஒருவர் பொலிசாரிடம் இருந்து விபரங்களைப் பெற்று அந்த விபரங்களை பத்திரிகையில் பிரசுரித்திருக்கலாம். காவலரண் என்ற சொல் பிழையாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட செய்தியில் நடப்பதாகக் கூறும் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் வேண்டுமென்றே யாரோ இவ்வாறான பொய் முறைப்பாட்டைத் தந்திருக்கின்றார்கள் என்றும் இன்று அந்த பிரதேச மக்கள் என்னை வந்து சந்தித்துக் கூறினார்கள்.

உண்மையில் எதுவும் அங்கு நடைபெறவில்லை என்றால் பொலிசார் அதுபற்றி எனக்கு அறிக்கை தருவார்கள் என்று கூறினேன்.

பத்திரிகையில் பிரசுரித்ததால் அவ்வூர் மக்கள் மனச்சஞ்சலம் அடைந்திருக்கின்றார்கள் என்பதால் பொலிசாரின் அறிக்கை வந்ததன் பிற்பாடு நான் இது பற்றிய உண்மையை பத்திரிகைகள் மூலம் வெளிப்படுத்துவேன் என்று அவர்களுக்குக் கூறினேன்.

மேலும், அதுவரை அவ்வூர் மக்கள் அனைவரும் சமாதானத்தைக் காக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.