புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வருகிற 17-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமாருக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் கடந்த வெள்ளிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்தார். நேற்று அவர் எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு திரட்டும் பணியைத் தொடங்கினார்.
நேற்று முதலில் அவர் உத்தரபிரதேசம் மாநிலத்துக்கு சென்றார். அங்கு எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இன்று (திங்கட்கிழமை) ராம்நாத் கோவிந்த் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றார். அங்கு அவர் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க் களை சந்தித்து தனக்கு ஆதரவு கேட்க திட்டமிட்டுள்ளார். அவருடன் பா.ஜ.க மேலிட பிரதிநிதிகள் 4 பேர் உடன் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீராகுமார் நாளை மறுநாள் (28-ந் தேதி) வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளார். அதன்பிறகு அவர் எல்லா மாநிலங்களுக்கும் சென்று தனக்கு ஆதரவு திரட்ட உள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். அவர்களது மொத்த ஓட்டு மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆகும்.
பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு சிவசேனா, தெலுங்கு தேசம், அகாலிதளம், லோக் ஜனசக்தி, பிஜீ.ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கனா ராஷ்டீரிய சமிதி, அ.தி.மு.க, ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் உள்பட பல கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. இதன் மூலம் ராம்நாத் கோவிந்துக்கு 6,82,677 வாக்குகள் கிடைக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இது மொத்த வாக்குகளில் 62 சதவீதம் என்பது குறிப்பிடதக்கது.
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மீரா குமாருக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க, மதச்சார்பற்ற ஜனதா தளம், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்டுகள் உள்பட 17 கட்சிகளின் ஆதரவு உள்ளது. என்றாலும் அவருக்கு 3,76,261 வாக்குகளே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. இது மொத்த வாக்குகளில் 34 சதவீதமாகும்.
ஆம் ஆத்மி, இந்திய லோக்தளம், முஸ்லிம் மஜ்லிஸ்தன், மற்றும் சுயேட்சைகள் வாக்குகள் 39,965 உள்ளது. இது 4 சதவீதம். இந்த 4 சதவீதம் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற 5,49,452 வாக்குகள் பெற வேண்டும். பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு இதை விட கூடுதலாக 1½ லட்சம் வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 20-ந் தேதி ஓட்டுகள் எண்ணப்பட உள்ளது. அன்று ராம்நாத் கோவிந்துக்கும் மீரா குமாருக்கும் எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது தெரிந்து விடும்.