நள்ளிரவு 2 மணிக்கும் டிவிட்டர் மூலம் இந்தியர்களுக்கு உதவுகிறார் சுஷ்மா: மோடி புகழாரம்

பிரதமர் நரேந்திரமோடி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்திக்கும் வகையில் 2 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று வாஷிங்டன் சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

வாஷிங்டன்னில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சுஷ்மா சுவராஜ் தலைமையில் மத்திய வெளியுறவுத்துறை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு சமூக வலைதளங்கள் சக்தி வாய்ந்த ஊடகமாக மாறி இருக்கிறது. இவற்றை இந்திய வெளியுறவுத்துறை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.

உலகில் எந்த மூலையில் இந்தியர்களுக்கு பாதிப்பு என்றாலும் சமூக வலைதளம் மூலம் தகவல்களை பெற்று உடனடி நடவடிக்கையை மத்திய வெளியுறவுத்துறை எடுத்து வருகிறது. சுஷ்மா சுவராஜுக்கு யாராவது தகவல் அனுப்பினால் அடுத்த 15 நிமிடத்தில் அவர் அதற்கு பதில் அளிக்கிறார்.

இரவு 2 மணிக்கு கூட அவருக்கு தகவல் அனுப்பினாலும் அதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 3 ஆண்டில் இந்த துறை பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறது. உலகம் முழுவதும் 80 ஆயிரம் இந்தியர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியபோது அவர்களை பத்திரமாக தாயகத்திற்கு திரும்ப அழைத்து வந்தனர்.

பாகிஸ்தானில் உஷ்மாஅகமது என்ற இந்திய பெண் துப்பாக்கி முனையில் கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டார். இந்தியாவின் மகளான அவரை பத்திரமாக இந்தியாவிற்கு திரும்ப அழைத்து வந்தோம். இதற்கு சுஷ்மா சுவராஜ் தான் காரணம்.

இந்தியர்கள் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பாகவும், உதவியாகவும் இந்திய வெளியுறவு துறை இருந்து வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இன்று இரவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கிறார். அப்போது இருவரும் பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். குறிப்பாக எச்-1பி விசாவால் இந்தியர்கள் பாதிக்கப்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

இந்த சந்திப்பு முடிந்ததும் மோடி இன்றே டென்மார்க் புறப்பட்டு செல்கிறார். நாளை அந்த நாட்டு ராணியை சந்திக்கும் அவர் பின்னர் அவர் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறார்.