சீன நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, அந்நாட்டு அரசு போக்குவரத்து துறைகளிலும் நவீன மாற்றங்களை செய்து வருகிறது. சீன ரெயில்வே பயணிகளை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளது.
சீனாவின் முக்கிய நகரங்களான பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகியவற்றை இணைக்கும் வகையில் அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரெயில் சேவை இன்று பயணிகள் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டது.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், ’’பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு இடையே 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புல்லட் ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இரண்டு நகரங்களில் இருந்தும் தனித்தனியாக இன்று காலை 11 மணியளவில் புல்லட் ரெயில்கள் ஓடத் தொடங்கின.
பெய்ஜிங்கிலிருந்து கிளம்பிய ரெயில் 5 மணி நேரம் 45 நிமிடங்கள் பயணம் செய்து ஷாங்காயை அடைந்தது. ஜினான், ஷாண்டாங் மாகாணம் மற்றும் தியான் ஜின் உள்ளிட்ட 10 ரெயில் நிலையங்களில் நின்று சென்றது.
முதலில் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். அதன்பின், படிப்படியாக வேகத்தை அதிகரித்து 400 கிலோமீட்டர் செல்லும். தினசரி சுமார் 5,05,000 பேர் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்’’ என குறிப்பிட்டனர்.