பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை: அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் மோடி பேச்சு

அமெரிக்காவில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா ஆட்சியில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என கூறினார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு விர்ஜீனியாவில் வாழும் இந்தியர்கள் வரவேற்பு அளித்தனர். 600-க்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் இந்தியர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியர்கள் ஊழலை வெறுக்கின்றனர். இந்தியாவில் கடந்த காலங்களில் அமைந்த ஆட்சிகள் அகற்றப்பட்டதற்கு முக்கிய காரணமே ஊழல்தான். ஆனால் எங்கள் பாரதீய ஜனதா அரசின் 3 ஆண்டு சாதனையே, இதுவரை ஊழலின் ஒரு கறையோ, சுவடோ இந்த அரசில் இல்லை என்பதுதான்.

இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் வெளிப்படைத்தன்மையை கொண்டு வந்திருக்கிறது. இந்த தொழில்நுட்பங்களின் உதவியுடன் இந்தியா மிகப்பெரும் சாதனைகளை செய்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு உதாரணங்களை என்னால் கூற முடியும்.

பல்வேறு காரணிகளில் நாடு மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. நாட்டின் நிலையான வளர்ச்சிக்கு கட்டமைப்புகள் மிகவும் முக்கியமானது. சாதாரண மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து இருப்பதும், நாட்டின் மின்னல் வேக வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் ஆகும். இந்திய மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவே நாங்கள் உழைத்து வருகிறோம்.

இந்தியா தற்போது ஏராளமான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. மிகப்பெரும் முதலீட்டு திசையாக இந்தியாவை இன்று உலக நாடுகள் பார்க்கின்றன. இந்தியா முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், புலம்பெயர்ந்து வாழும் நீங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும்.

பயங்கரவாதத்தை பற்றி 20 ஆண்டுகளுக்கு முன்னால் நாம் பேசும்போது, அது வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்றுதான் பல உலக நாடுகள் கூறியதுடன், அதன் வீரியத்தை உணராமலும் இருந்தன. ஆனால் பயங்கரவாதம் என்றால் என்ன? என்று அவர்களுக்கு தற்போது பயங்கரவாதிகளே உணர்த்தி வருகின்றனர்.

எனவே நாம் அதைப்பற்றி கூற வேண்டியது இல்லை. அதனால்தான் பயங்கரவாதத்தின் கோரமுகம் எவ்வாறு இந்தியாவின் அமைதியையும், இயல்பு வாழ்க்கையையும் சீரழிக்கிறது? என்பதை வெற்றிகரமாக நாம் உலக நாடுகளுக்கு தெளிவுபடுத்த முடிந்தது.

பயங்கரவாதத்துக்கு எதிராக துல்லியமான தாக்குதலை நாம் மேற்கொண்ட போது, நமது பலத்தை உலக நாடுகள் புரிந்து கொண்டதுடன், தன்னடக்கமான அந்த தாக்குதலையும், தேவை ஏற்படும்போதும், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கும், தங்களை பாதுகாத்துக்கொள்ளவும் இந்தியா தனது பலத்தை காட்ட முடியும் என்பதையும் உணர்ந்து கொண்டன.

பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வரும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய நடவடிக்கையான அந்த துல்லிய தாக்குதல் குறித்து எந்த நாடும் கேள்வி கேட்கவில்லை. அந்த தாக்குதல் மூலமாக சிலர் (பாகிஸ்தான்) பாதிக்கப்பட்டது வேறு விஷயம்.

சமூக ஊடகங்கள் இன்று மிகவும் சக்தி வாய்ந்தவையாக மாறிவிட்டன. நானும் அவற்றை எப்போதும் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் இதை எவ்வாறு பலமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கு வெளியுறவு அமைச்சகமும், மந்திரி சுஷ்மா சுவராஜும் சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றனர்.

உலகின் எந்த ஒரு மூலையிலும் இந்தியர்கள் அவதிப்படுவதாக வெளியுறவு அமைச்சகத்துக்கு டுவிட்டர் மூலம் தகவல் வந்தால், அது அதிகாலை 2 மணியாக இருந்தாலும் சரி, அடுத்த 15 நிமிடங்களுக்குள் சுஷ்மா சுவராஜ் பதிலளித்து விடுவார். பின்னர் அது தொடர்பாக அரசு சரியான நடவடிக்கை எடுப்பதுடன், பயன்களையும் அறுவடை செய்கிறது. இதுதான் சிறந்த நிர்வாகம்.

இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.

முன்னதாக அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை பிரதமர் மோடி எழுதியிருந்தார். அதில் அவர், ‘இந்தியாவின் உருமாற்றம், ஏராளமான வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை அமெரிக்க வணிகத்துக்கு வழங்குகிறது. ஜூலை 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. வரி, 130 கோடி மக்களின் கண்டம் அளவிலான சந்தையை, இந்தியாவை ஒன்றுபடுத்தும்’ என்று கூறியிருந்தார்.

இந்தியாவில் கட்ட திட்டமிடப்பட்டு உள்ள 100 ஸ்மார்ட் நகரங்கள் வெறும் நகர்ப்புற மறுசீரமைப்புக்கான வாக்குறுதியாக மட்டும் இருக்காது என்று கூறியிருந்த மோடி, கோடிக்கணக்கான முதலீட்டில் மேற்கொள்ளப்படும் இந்த திட்டங்கள் ஆர்வமுள்ள அமெரிக்க கூட்டாளிகளுடன் இணைந்து மேற்கொள்வதால் இருநாட்டு உறவுகளும் சிறந்த உச்சத்தை அடையும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.