வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடியதை விட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும்போது அவருக்கு உலகளாவிய புகழ் கிடைத்தது.
டோனியின் தலைமையின் கீழ் அவர் மிகவும் ரசித்து கிரிக்கெட் விளையாடினார். டோனி, ரெய்னா, ஜடேஜா மற்றும் இந்திய வீரர்களை தனது சகோதரர்கள் போல்தான் நினைத்து வருகிறார்.
இந்திய அணி ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றபோது நேரில் சென்று வெயின் பிராவோ வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
ஸ்பொர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 105 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின் இந்திய வீரர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து அளித்து உபசரித்தள்ளார் வெயின் பிராவோ.
இந்த விருந்தின்போது ரகானே, கோலி, தவான் மற்றும் டோனியுடன் எடுத்துக் கொண்ட படத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘‘என்னுடைய சகோதரராகிய டோனி, தன்னுடைய அழகான மகளுடன் என்னுடைய வீட்டிற்கு வந்தது மிகவும் சிறப்பானது’’ என்று தெரிவித்துள்ளார்.