சக்தி வழிபாட்டுக்குரிய முக்கியமான விரதம்

நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச் சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி. இந்த விரதம் புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது.

முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.
இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக்கொலு அலங்கரிக்கப்படுகிறது.

சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல் கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாளினுல் வரும்போது எண்ணெய் தேய்காது நீராடி அந்த விரதத்தையும் கைகொள்ளலாம்.

நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.