துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் பதவிக்காலம், ஆகஸ்டு 10-ந்தேதி முடிவடைகிறது. எனவே, அந்த பதவிக்கு போட்டியிடுவீர்களா? என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடுவிடம் நேற்று டெல்லியில் நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு அவர் கூறியதாவது:-
மக்களை நேரில் சந்தித்து, அவர்களில் ஒருவராக இருந்து அவர்களுக்கு சேவை செய்வதில்தான் எனக்கு சந்தோஷம். எந்தவிதமான சம்பிரதாய பதவியையும் ஏற்றுக்கொண்டு, மக்களிடம் இருந்து விலகி இருக்க நான் விரும்பவில்லை.
எந்த வரையறையும் இன்றி, என் மனதில் பட்டதை பேசிக்கொண்டு, வெவ்வேறு இடங்களுக்கு சென்று, மக்களை சந்தித்து, அவர்களின் உணவை சாப்பிட்டு வாழ்வதையே நான் விரும்புகிறேன். எனவே, யாராவது வற்புறுத்தினால் கூட நான் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.