பொருளாதார வளர்ச்சியில் நெதர்லாந்து இந்தியாவின் இயற்கையான கூட்டாளி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்த பின்னர் வாஷிங்டனில் இருந்து தனிவிமானம் மூலம் நெதர்லாந்து நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டியை சந்திப்பதற்கு முன்பு பேசிய மோடி, நாங்கள் இரு நாட்டு உறவையும், உலக விவகாரங்களையும் விவாதிக்க உள்ளோம். இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மிகப் பழைமையானது.
எங்களது உறவு வலுவானது. இரு நாடுகளின் உறவு வரும் காலங்களிலும் மிக வலிமையாக இருக்கும். ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் இணைய இந்தியாவிற்கு ஆதரவளித்ததற்கு நன்றி. உங்களது ஆதரவால் இந்தியாவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
மேலும் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5வது பெரிய முதலீட்டு நாடாக நெதர்லாந்து திகழ்வதாகவும் மோடி தெரிவித்தார். நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டி பேசுகையில், இந்தியா உலக பொருளாதார சக்தியாக மாறியது வரவேற்கத்தக்கது.
அது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் வரவேற்கத்தக்கது. புதுப்பிக்கதக்க ஆற்றல், பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பாராட்டு தெரிவித்த நெதர்லாந்து பிரதமர், இந்தியா தனது இலக்குகளை அடைய நெதர்லாந்து உதவும் எனத் தெரிவித்தார். மேலும் தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களையும் பாராட்டினார்