நடிகர் ரஜினிகாந்த் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியின் உருவபொம்மையை எரித்து ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம்.
தமிழகத்தில் ஊழலையும், லஞ்சத்தையும் ஒழிக்க ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் கடந்த 21 ஆண்டுகளாக அவரை அழைத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
இது ஆளும் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாஜகவும் தமிழகத்தில் ரஜினியை வைத்து காலூன்றி விடலாம் என கணக்கு போட்டது. பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசையும் அழைப்பு விடுத்துள்ள நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரஜினியை சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஜினிகாந்தை ஒருமையில் பேசினார் சுப்பிரமணியன் சுவாமி. இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சிவகங்கையில் ரஜினி ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை பேருந்து நிலையம் எதிரே திரண்ட ரஜினிகாந்தின் ரசிகர்கள், சுப்ரமணியன் சுவாமியின் உருவப் பொம்மையை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக கோஷமிட்டும்தமது கருத்து குறித்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினர். ரஜினி ரசிகர்கள் உருவப்பொம்மை எரித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களை போலீசார் கைது செய்தனர்