யாழில் கொலை செய்து புதைக்கப்பட்ட பெண்! குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்தார் நீதிபதி இளஞ்செழியன்

யாழில் பெண் ஒருவரை கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்த நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே குற்றவாளிக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள வீடு ஒன்றில் லில்லி மேரி என்ற வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்டு அவரது வீட்டின் முற்றத்தில் புதைக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணான லில்லி மேரி, அவரது வீட்டை ஜெரோம் என்பவருக்கு வாடகைக்கு வழங்கியுள்ளார்.

குறித்த வீட்டில் லில்லி மேரி, ஜெரோம் அவரது மனைவி என அனைவரும் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் லில்லி மேரியை காணவில்லை என ஜெரோம் தெரிவித்துள்ள நிலையில் பொலிஸில் முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜெரோமுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் சண்டை வந்துள்ளது. இதனால் லில்லி மேரியை எனது கணவரே கொலை செய்து விட்டதாக ஜெரோமின் மனைவி தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் ஜெரோம் கைது செய்யப்பட்ட நிலையில், “நியமான சந்தேகங்களுக்கு அப்பால் எதிரியான ஜெரோம் குற்றவாளியாக இனங்காணப்படுகிறார். அவருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுகிறது” என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.