சுவிட்சர்லாந்தில் உள்ள நிறுவனமொன்றுக்கு காணொளியை விற்பனை செய்வதற்காக புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக பதில் சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா இன்று அறிவித்துள்ளார்.
யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று ஆரம்பமான விசாரணைகளின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகியோருடன் பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், வித்தியா படுகொலை வழக்கின் விசாரணை இன்று ஆரம்பமானது.
விசேட வழக்கு தொடுநரான சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார ரட்ணம் மற்றும் யாழ். மேல் நீதிமன்ற அரசதரப்பு சட்டத்தரணி நிஷாந்த் நாகரட்ணம், மன்னார் மேல் நீதிமன்ற சட்டவாதி ஷகிப் ஸ்மாயில், அரச சட்டத்தரணி லக்சி,? சில்வா மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற அரச சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் இந்த வழக்கில் ஆஜராகினர்.
சந்தேகநபர்களுக்கு எதிரான திருத்தப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் இன்று பகிரங்க நீதிமன்றத்தில் மீண்டும் வாசிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், குற்றவாளியா, சுற்றவாளியா என நீதிபதிகள் வினவியபோது, ஒன்பது சந்தேகநபர்களும் தாம் சுற்றவாளிகள் என கூறியுள்ளனர்.
வழக்கின் ஐந்தாவது சந்தேகநபர் மீது சுமத்தப்பட்டுள்ள 41 குற்றச்சாட்டுக்களையும் முறையில் விசாரிக்க முடியாது என அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.