சர்வேஸ்வரன் கல்வியமைச்சர்! அனந்தி புனர்வாழ்வு மீள்குடியேற்றம் கூட்டுறவு அமைச்சர் : விக்னேஸ்வரன் உறுதி

வடமாகாணத்தில் தொடர்ந்து வந்த அமைச்சரவையின் குழப்பநிலை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணசபையின் புதிய அமைச்சர்கள் இருவரையும் தெரிவுசெய்வதற்காக ஆளும் தரப்பின் அவசர கூட்டம் முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று மாலை கூடியது.

இதன்போது மகளிர் விவகாரம், சமூக சேவைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சராக அனந்தி சசிதரனும், கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக கந்தையா சர்வேஸ்வரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும், தனக்கு ஏற்பட்டுள்ள அதிக வேலைப் பளு காரணமாக அமைச்சர்களை நியமிக்க தீர்மானித்ததாகவும், தற்காலிகமாக இவ்வமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

எனினும், விவசாய கால்நடை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சினை தன் வசம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வைத்துள்ளார்.

இதேவேளை, நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதன்மூலம் வடமாகாண சபையில் இழுபறியாக இருந்த அமைச்சர்கள் நியமனம் இன்று தீர்வுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வடமாகாண புதிய அமைச்சர்களாக அனந்தி மற்றும் சர்வேஸ்வரன்

வடமாகாண புதிய அமைச்சர்களாக க.சர்வேஸ்வரன் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் 3 மாதங்களுக்கு தற்காலிக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண அமைச்சர்கள் மீதான குற்றசாட்டுக்களை விசாரணை செய்ய என முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழு கல்வி அமைச்சர் மற்றும், விவசாய அமைச்சர் ஆகியோரை பதவி விலக பரிந்துரை செய்திருந்தது.

அதனை அடுத்து குறித்த இரு அமைச்சர்களையும் பதவியை தியாகம் செய்யுமாறு முதலமைச்சர் கேட்டதற்கிணங்க கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மற்றும், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

அந்த நிலைமையில் கந்தையா சர்வேஷ்வரனை மாகாண கல்வி அமைச்சராகவும், திருமதி அனந்தி சசிதரனை மகளீர் விவகார , கூட்டுறவு அமைச்சராக தற்காலிகமாக 3 மாதங்களுக்கு முதலமைச்சர் நியமித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரையில் முதலமைச்சரின் இல்லத்தில் முதலமைச்சருக்கு ஆதரவு வழங்கிய 14 உறுப்பினர்களை சந்தித்து பேசியிருந்தார். அத்துடன் விவசாய நீர்ப்பாசன அமைச்சினை முதலமைச்சர் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நாளைய தினம் இருவரும் தமது அமைச்சு பொறுப்புக்களை வடமாகாண ஆளுநர் முன்பாக ஏற்றுக்கொள்ளவுள்ளனர்.