அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு, சட்டரீதியான சுதந்திரமான தெரிவுக்குழு அமைத்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதற்காக அச்சப்படுகின்றார் தயங்குகின்றார்?” என வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ஊடகம் ஒன்றிக்கு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் இருவரையும் கட்டாய விடுப்பில் இருக்க முதலமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து, வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனால் மாகாண சபையில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்த விவகாரம் இணக்கத்துக்கு வரும்போது, வடக்கு மாகாண சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்கள் மீதான விசாரணை, சட்டரீதியான சுதந்திரமானதாக இருக்கும் என்று முதலமைச்சரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், முன்னைய விசாரணைக்குழுவைப் போன்று இரு அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்த புதிய விசாரணைக்குழுவை நியமித்துள்ளார்.
இந்த விசாரணைக்குழு முன்பாக முன்னிலையாகுவீர்களா என்று வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் கேட்டபோது,
“சட்டரீதியான சுதந்திரமான விசாரணைக்கே முகங்கொடுப்பேன். அவ்வாறில்லாத எந்தவொரு விசாரணையையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். மாகாண சபை தெரிவுக்குழுவே, சட்டரீதியான சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை.
அதனை நியமிக்க முதலமைச்சர் ஏன் பயப்படுகின்றார்? தயங்குகின்றார்? தெரிவுக்குழு விசாரணை தவிர்ந்த ஏனைய விசாரணைக்குழு முன்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிலையாக மாட்டேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.