அரச அலுவலகங்களுக்குள் பல்கலைக்கழக மாணவர்கள் அத்துமீறி நுழையத் தடை

ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதி செயலகம் உட்பட எந்தவொரு அரச காரியாலயத்துக்குள் நுழைவதற்கும் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்துவதற்கும் கொழும்பு கோட்டை நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிவானுமான லங்கா ஜயரத்ன தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொழும்பு கோட்டை பொலிஸார் முன்வைத்த வேண்டுகோள் ஒன்றினைப் பரிசீலித்த நீதிவான் ஜனநாயக நாடொன்றில் தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்கும் போராட்டங்களை நடத்துவதற்கும் சகலருக்கும் உரிமையுள்ள போதிலும்.,

பொதுமக்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும், வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வதற்கு இடமளிக்கமுடியாதென்பதால் அத்தகைய ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.

சுகாதார அமைச்சுக் கட்டடத்துக்குள் அத்துமீறிப் புகுந்து கலவரம் புரிந்த சம்பவத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்யுமாறு கோரி மாணவர்களில் ஒருசாரார் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோட்டையிலுள்ள ஜனாதிபதி காரியாலயத்துக்குள் நுழைவதற்கும் முயற்சிசெய்தமைக்கு எதிராக கொழும்பு கோட்டை பொலிஸார் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவொன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட பின்பே மேற்கூறிய தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.