மோடிக்கு சைக்கிள் பரிசளித்து அசத்திய நெதர்லாந்து பிரதமர்

பிரதமர் மோடி தனது 2 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு சென்றார். நேற்று அவர் அந்நாட்டின் பிரதமர் மார்க் ரட்டேயை ஆம்ஸ்டர்டாம் நகரில் சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயிற்று.
இதனிடையே, பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பும் போது, அவருக்கு நெதர்லாந்து பிரதமர் அழகான சைக்கிள் ஒன்றினை பரிசாக அளித்தார்.
இதனையடுத்து சைக்கிளை பரிசளித்த மார்க் ரட்டேவுக்கு மோடி நன்றி தெரிவித்தார். மேலும், சைக்கிள் மற்றும் நெதர்லாந்து பிரதமருடன் பல்வேறு புகைப்படங்களை மோடி எடுத்துக் கொண்டார்.
பிரதமர் மார்க் ரட்டே அளித்த சைக்கிள் நெதர்லாந்து நாட்டில் போக்குவரத்துக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகும். நெதர்லாந்து நாட்டில் 36 சதவீதம் மக்கள் சைக்கிள் போக்குவரத்தையே விரும்புகின்றனர்.
வெளிநாடுகள் செல்லும் பொழுதெல்லாம் அந்நாட்டு தலைவர்களுக்கு இந்தியாவில் இருந்து ஒரு பரிசினை கொண்டு சென்று அளிப்பது வழக்கம். இந்த முறை மோடிக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் நெதர்லந்து பிரதமர் பரிசு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரதமர் மார்க் ரட்டே தனது டுவிட்டர் பக்கத்தில், தங்கள் நாட்டில் வருகை புரிந்த பிரதமர் மோடிக்கு இந்தி மொழியில் நன்றி தெரிவித்தார்.