அமெரிக்காவை சேர்ந்த கூகுள் நிறுவனம் உலகின் மிகப் பிரபலமான தேடு பொறியாக உள்ளது.
அது நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ஐரோப்பிய யூனியன் அந்நிறுவனத்துக்கு 240 கோடி யூரோ (ரூ.17 ஆயிரம் கோடி) அபராதமாக விதித்துள்ளது. இது குறித்து ஐரோப்பிய யூனியன் தலைவர் மார்கரெட் வெஸ்டேஜர் கூறியதாவது:-
‘‘தனது சொந்த ஷாப்பிங் தேவைகளை முன்னிலைப்படுத்துவதற்கே கூகுள் நிறுவனம் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் மூலம் இதர நிறுவனங்கள் சந்தையில் போட்டியிட கூகுள் சம வாய்ப்பு வழங்கவில்லை.
மேலும் மற்ற நிறுவனங்களின் சிறப்பியல்புகள் மற்றும் அவற்றின் கண்டுபிடிப்புகள் சந்தையில் முன்னிலைப்படுத்தப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவன தேடு பொறியில் அதன் சொந்த ஆன்லைன் சேவை, கூகுள் ஷாப்பிங்குக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் டியில் அட்வைசர், எக்ஸ்மீடியா நிறுவனங்கள் அதிக நஷ்டத்தை சந்தித்துள்ளன.
எனவே நம்பிக்கைக்கு மாறான வகையில் செயல்பட்டதற்காக கூகுள் நிறுவனத்துக்கு ரூ.17 ஆயிரத்து 220 கோடி (240 கோடி யூரோ) அபராதமாக விதிக்கப்படுகிறது’’ என்றார்.
இதற்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த இன்டெல் நிறுவனத்துக்கு ரூ.750 கோடி (106 கோடி டாலர்) அபராதம் விதிக்கப்பட்டது. இதுவே அதிகபட்ச அபராதமாக கருதப்பட்டது.