உச்சத்தை அடைந்துள்ள டிடிவி தினகரன்- எடப்பாடி பழனிச்சாமி மோதல்

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் டிடிவி தினகரன் என மூன்று அணியாக அதிமுக பிரிந்து கிடக்கிறது.

இதில் சமீபகாலமாக டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களும், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு எம்எல்ஏ-க்களும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது, நேற்றைய சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பின்னர் ராமச்சந்திரன், முருகுமாறன் எம்எல்ஏ உட்பட ஏழு பேர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

இதன்போது ராமச்சந்திரன் கூறுகையில், ஆர்கே நகர் தேர்தலில் வெற்றிவேல் எம்எல்ஏ எதன் அடிப்படையில் பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர் பெயரை வெளிப்படுத்தவில்லையோ அதன் அடிப்படையில் தான் நாங்களும் வெளிப்படுத்தவில்லை.

எம்ஜிஆர் தனக்கு பின்னர் அண்ணன் மகன், பேரப் பிள்ளைகளை வாரிசாக அறிவிக்கவில்லை, ஜானகியும் கட்சியை வழிநடத்தும் தகுதி ஜெயலலிதாவுக்கு இருப்பதாக கூறிவிட்டு ஒதுங்கிவிட்டார்.

ஜெயலலிதா தனக்கு பின்னரும் வாரிசு அரசியலை உருவாக்கவில்லை, சசிகலா சிறைக்கு சென்ற பின்னர் கட்சியை தொண்டர்களில் ஒருவரிடம் ஒப்படைத்திருந்தால் நாங்கள் ஏற்றுக் கொண்டிருப்போம்.

ஆனால் வாரிசு அரசியலை உருவாக்கியதைதான் ஏற்கவில்லை, அதனால் தான் புறக்கணிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.