புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விசாரணைகள் மேல் நீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் அடங்கிய தீர்ப்பாயம் முன்னிலை யில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று ஆரம்பமானது.
வழக்கின் முதலாவது சாட்சியான வித்தியாவின் தாயார் சிவலோகநாதன் சரஸ்வதி தீர்ப்பாயம் முன்னிலையில் கண்ணீருடன் நேற்றுச் சாட்சியமளித்தார்.
மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் அடங்கிய தீர்ப்பாய அமர்வு நேற்றுக் காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் 2ஆவது மாடியிலுள்ள திறந்த மன்றில் கூடியது.
மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் 9 சந்தேகநபர்களும் அநுராதபுரம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தீர்ப்பாயத்தின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்கள்.
வழக்குத் தொடுநர் சார்பில் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா, பிரதி மன்றாடியார் அதிபதி பி.குமாரரத்தினம் மற்றும் அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த் மற்றும் அரச சட்டவாதிகள் தீர்பாயத்தில் முன்னிலையாகினர்.
1,2,3,4,5 மற்றும் 6ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணிகள் சாரங்க பாலசிங்க, மகிந்த ஐயவர்த்தனவும், 5ஆம் எதிரி சார்பில் சட்டத்தரணி ரகுபதியும், 4,5,7,9ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சி.ஜெதீஸ்வரனும், 9 சந்தேகநபர்கள் சார்பிலும் தீர்ப்பாயத்தால் அரச செலவில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி ஜெயந்தவும் பாதிக்கப்பட்டோர் நலன்சார்பில் வி.மணிவண்ணன், ஜே.பி.ரஞ்சித்குமார் ஆகியோரும் தீர்ப்பாயத்தில் முன்னிலையாகினர்.
எதிரிகளுக்கு எதிரான 41 குற்றச்சாட்டுகளும் வாசித்துக் காண்பிக்கப்பட்டன. அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுத்த எதிரிகள் தாம் சுற்றவாளிகள் என்று உரைத்தனர். அதனால் வழக்கு விசாரணையை முன்னெடுப்பது என்று தீர்ப்பாயம் அறிவித்தது.
சாட்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டனர். அவர்கள் சாட்சியமளிக்கும் தினங்கள் தீர்ப்பாயத்தால் அறிவிக்கப்பட்டது. எந்தவொரு தாமதமுமின்றி வழக்கு விசாரணையை முன்னெடுக்க வழக்குத் தொடுனர் மற்றும் எதிரி தரப்பினர் ஒத்துழைக்க வேண்டும் என்று தீர்ப்பாயத்தால் அறிவுறுத்தப்பட்டது.
முதலாவது சாட்சியாக கொல்லப்பட்ட மாணவியின் தாயார் சிவலோகநாதன் சரஸ்வதி சாட்சியமளித்தார். அவரின் வழக்குத் தொடுனர் தரப்பில் பிரதி மன்றாடியார் அதிபதி பி.குமாரரட்ணம் விசாரணை நடத்தினார்.
“நிலம் தெரியும் அளவுக்கு வெளிச்சம் வந்த பிறகுதான் 6 மணிக்கு மகளைத் தேடிப் பார்க்கப் போனாங்கள். நிசாந்தன், இலங்கேஸ்வரன் மற்றும் விக்னேஸ்வரனும் என்னுடன் வந்தார்கள். நடந்துதான் போன்னாங்கள். வளர்க்கிற நாயும் எம்முடன் வந்தது. வயலைக் கடந்து 2 இரு பிரிவுகளாகப் பிரிந்து தேடினாங்கள்.
இலங்கேஸ்வரனும் நிசாந்தனும் நின்ற பக்கத்தில் குளறிச் சத்தம் கேட்டது. அங்க நாங்களும் போனாங்கள். எனது மகன் நான் போனதும் அம்மா வித்தியா என்று சொன்னார். நான்அப்படியே மயங்கிப் போட்டேன்.
மகன் சொல்லிவிட்டு அவரும் மயங்கிவிட்டார். 20 மீற்றர் தூரத்தில்தான் அவாவ பார்த்தனான். கிட்டப் போகவில்லை” என்று வித்தியாவின் தாயார் கண்ணீருடன் சாட்சியமளித்தார்.
“வழமையாக சைக்கிளில்தான்போறவா. பாடசாலைக்கு சைக்கிளில் என்றால் அரை மணித்தியாத்தில் போகலாம். நடை என்றால் 2 மணித்தியாலங்களாகும்.
கணேசா வித்தியாசாலைக்கு பிரத்தியேக வகுப்புக்காகப் போறவா. பாடசாலையில் கூட்டு முறை என்றபடியால் அன்றைக்கு 7.30 மணிக்கு மகள் போனவா. நான் அழைத்துப் போய் கேற்றடியில் விட்டனான். பாடசாலையில் மகளோட படிக்கிற பிள்ளைகளின்ர வீடுகளுக்கும் அவா போறவா. அன்று அவா வரப் பிந்தியதும் அவர்களின்ர வீடுகளுக்குத்தான் போட்டா என்று நான் பார்த்துக்கொண்டு நின்றனான்.
சம்பவம் நடந்த அன்று மகளை வயல் வெளிப் பகுதியில் இரண்டு பிள்ளைகள் கண்டிருக்கினம். அன்றைக்கு அவையள் பாடசாலைக்குப் போகவில்லை. வித்தியாவுக்கு ரீதான் பிடிக்கும். காலையில் சாப்பிடுறது இல்ல.
புதன்கிழமை பின்னேரம் மழை தூறிக் கொண்டு இருந்தது. பள்ளிக்கு போனவ 2.30 மணியாகியும் காணயில்லை என்று மகளைப் பார்த்துவர மகனை விட்டனான்.
தங்கச்சி வரயில்லயாம் என்று போன் பண்ணி மகன் எனக்குச் சென்னவர். காணவில்லை என்று தேடினாங்கள். 6.30 மணி வரைக்கும் எல்லா இடங்களிளும் தேடினாங்கள். பொலிஸில் முறைப்பாடு போடவேணும் என்று எல்லோரும் எங்களுக்குச் சொன்னார்கள்.
நயினாதீவு போற பாதையில பொலிஸார் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். அந்த இடத்துக்கு முறைப்பாடு போடபோனாங்கள். அப்போது 6.30 மணியிருக்கும். முறைப்பாடு எடுக்க முடியாது ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்யும்படி பொலிஸார் கூறினார்கள். அங்கபோக இரவு 9.30 மணியாயிற்று.
பொலிஸிலையும் இந்த வயதுப் பிள்ளைகள் எங்கயாவது ஓடி இருக்கும் திரும்பி வருவார் என்று சொல்லிச்சினம். எங்கட பிள்ளை அப்படிப் பட்டவர் இல்லை என நாங்கள் பொலிஸாரிடம் உறுதியாகக் கூறினோம். அதற்குப் பிறகுதான் முறைப்பாடு எடுத்தார்கள். போய்த் தேடுவதற்கு உதவி இல்லாதபோது, ஓட்டோச் சாரதி சந்தியில் கடை வைச்சிருக்கிறார்.
அவற்ற ஓட்டோவில்தான் பொலிஸூக்குப் போன்னாங்கள். அவர்தான் திரும்பியும் கொண்டு வந்து விட்டவர்.
ஒவ்வொரு நாளும் இந்தச் சந்தியில் ஏறேக்க பார்க்கிறனாங்கள். இன்றைக்குக் காணவில்லை. நீங்கள் சந்திக்கு உள்ள பாருங்க என்று சந்தியில் நிற்கிறவர்கள் சொன்னவர்கள்.
வித்தியா அணிந்திருந்த சீருடையை அவரது தாயார் அடையாளம் காட்டினார். அப்பொழுது பொங்கி வந்த அழுகையை அவரால் அடக்க முடிவில்லை. மன்று அமைதியடைந்தது. அழுகை மட்டும் மன்றை நிறைத்தது. பின்பு அவர் தன்னைச் சுதாகரித்துக் கொண்டார்.
“கணேச வித்தியாலயம் போய் வரும் போது, ஒரு வானில் ஆலடிச் சந்தியில் சில பேர் இருந்துகொண்டு வான் கண்ணாடியை பதித்து விட்டபடி பாரத்துக்கொண்டு நின்றனர். அவர்கள் அனைவரும் கண்ணாடி அணிந்திருந்தார்கள். பார்க்க வெளிநாட்டுக்காரர் போல இருக்கு” என்று வித்தியா என்னிடம் கூறினாள். “நீ என்றைக்கும் இல்லாமல் இன்றைக்கு பஞ்சாபி அணிந்திருந்தனி அதுதான் அவையள் பார்த்திருக்கினம்” என்று கூறினேன்” என்றார்.
எதிரி தரப்புச் சட்டத்தரணிகள் வித்தியாவின் தாயாரிடம் குறுக்கு விசாரணை செய்தனர். அவர்கள் சாட்சியிடம் தொடுத்த கேள்விகள் வழக்குடன் தொடர்புபடாதைவைகளாக இருந்தன. அவ்வப் போது தீர்ப்பாயம் எதிரி தரப்புச் சட்டத்தரணிகளை எச்சரித்தது. வழக்குடன் தொடர்பு இல்லாத கேள்விகள் எதனையும் சாட்சியிடம் கேட்டக் கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
முதலாவது சாட்சியிடம் சாட்சியம் நிறைவு பெற்றதும் 32ஆவது சாட்சிக்கு தீர்ப்பாயம் பிடியாணை பிறப்பித்து கட்டளையிட்டது. அவரைக் கைது செய்து தீர்ப்பாயம் முன்னிலையில் முற்படுத்துமாறு தீர்ப்பாயம் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குக் கட்டளையிட்டது.
அரச தரப்பு சாட்சியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் 5ஆவது சாட்சியிடம் இன்று சாட்சியம் பதிவு செய்யப்படும். மற்றொரு சாட்சி இந்தியா பயணமாகவுள்ளதால் அவரை ஒரு லட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணையில் விடுவித்த தீர்ப்பாயம் எதிர்வரும் 26ஆம் திகதி அவரை சாட்சியமளிக்க வருகை தருமாறு கட்டளையிட்டது.