வெளிநாட்டு ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் சர்வதேச சந்தையில் பாலியல் வல்லுறவு படுகொலையை ஒளிப்பதிவாக பதிவு செய்து விற்பனை செய்வதற்காகவே நன்கு திட்டமிட்ட வகையில் வித்தியா மீதான கூட்டுப் பாலியல் வல்லுறவு படுகொலை இடம்பெற்றுள்ளது என்று பதில் சட்டமா அதிபர் டப்புள டி லிபேரா மன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த குற்றச் செயலில் இருந்து தப்பிப்பதற்கு இவ் வழக்கின் ஒன்பதாவது சந்தேகநபர் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 20மில்லியன் ரூபா இலஞ்சம் கொடுக்க முற்பட்டமையும் ஆதாரங்களுடாக நிரூபிக்க முடியும் எனவும், இச் செயலானது சர்வதேச மயப்படுத்தப்பட்ட குற்றச் செயல் என்பதுடன் இது நாட்டின் கௌரவத்திற்கும் மரியாதைக்கும் களங்கம் ஏற்படுத்துவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த மாணவியின் கூட்டு பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கானது யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் தமிழ் மொழி பேசும் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றின்முன் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது. இவ் விசாரணையின் சாட்சிப் பதிவுகள் நேற்றைய தினம் ஆரம்பமாகிய போது பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டீ லிவேறா ட்ரயல் அட்பார் மன்றில் முன்னிலையாகி இவ் வழக்கின் ஆரம்ப உரையை நிகழ்த்தியிருந்தார். இவ்வாறு அவர் நிகழ்த்திய ஆரம்ப உரையிலேயே மேற்குறிப்பிட்டிருந்த விடயங்களை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவர் தனது ஆரம்ப உரையில் இவ் வழக்கு தொடர்பாக தெரிவித்திருப்பதாதவது,
இலங்கை சட்ட வரலாற்றில் யாழ்ப்பாணத்தில் ட்ரயல் அட்பார் நீதிமன்றில் விசாரணை இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். இவ் வழக்கில் எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் 41 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பகிர்வு பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அத்துடன் இவ் வழக்கை விசாரனை செய்ய பிரதம நீதியரசர் மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதிமன்ற நீதிபதிகளையும் நியமித்துள்ளார். இவ் வழக்கு விசாரணையானது யாழ்ப்பாணத்தின் சட்ட வலுவை மேலும் அதிகரிக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.
குறித்த வழக்கில் உயிரிழந்தது ஒர் பதினெடடு வயதான பெண்ணாகும். அவரது இறப்பும் அதற்கான காரணமும் முழு இலங்கை மக்களிடையேயும் ஒர் அதிர்ச்சியையும் பாரிய அதிர்வலைகளையும் தோற்றுவித்ததுடன் வடக்கில் குறிப்பாக சட்ட நீதி ஒழுங்கில் பிறள்வையும் ஏற்படுத்தியிருந்தது. இச் சம்பவம் பெற்றோர் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பீதியையும் ஏற்படுத்தியிருந்தது. அந்தவகையில் இவ் சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்ததுடன் அதன் பின்னர் விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர்.
இவ் குற்றச் செயல் தொடர்பாக விசாரணை செய்வது மிகுந்த கடினமாகவே குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு இருந்தது. இவ் விசாரணையின் போது சட்டமா அதிபர் அது தொடர்பாக மேற்பார்வை செய்ததுடன் தேவையான போது ஆலோசனைகளையும் வழங்கியிருந்தார். அதனூடாக இவ் விசாரணைகளானது மிகவும் நுணுக்கமாகவும் ஆழமாகவும் நடாத்தப்பட்டிருந்தன. நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதில் குற்றப் புலனாய்வு பிரிவினர் மிகுந்த கவனமாக செயற்பட்டிருந்தனர்.
இவ் குற்றச் செயல் தொடர்பான சம்மந்தப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அது தொடர்பான விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் அதில் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக பிறிதொரு வழக்கும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும். அந்தவகையில் இவ் வழக்கானது சாதாரண ஒர் வழக்கல்ல. சாதாரன ஒரு கூட்டு பாலியல் வல்லுறவு வழக்குமல்ல.
அதாவது இச்சம்பவமானது நன்கு திட்டமிடப்பட்டு முன்னரே இது தொடர்பாக அறியப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒர் குற்றச் செயலாகும். அந்தவகையில் இவ் குற்றச் செயலை நான் சர்வதேச மயப்படுத்தப்பட்ட
குற்றச் செயல் என கூறுவதற்கு தயங்க மாட்டேன்.அத்தோடு இன்னொரு குழுவினர் இவ் குற்றச் செயலூடாக நாட்டின் கௌரவத்திற்கும் சுயமரியாதைக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சித்துள்ளார்கள்.
இவ் வழக்கின் சாட்சிகள் சான்றுகள் தொடர்பாக பார்க்கின்ற போது இவ் வழக்கின் சாட்சிகள் சந்தர்ப்ப சாட்சிகளாகவும், சட்டமா அதிபரது உத்தரவாதத்தின் அடிப்படையில் எதிரிகளில் சிலர் அரச தரப்பு சாட்சிகளாக மாறியதையும் கொண்டு நிரூபிக்கப்படவுள்ள வழக்காகும்.
இதன்படி இவ் வழக்கில் 1,2,3 ஆகிய எதிரிகள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், 4,9 ஆகிய எதிரிகள் சகோதரர்கள், 6,9 ஆகிய எதிரிகள் மச்சான் உறவு முறையினர். இந்நிலையில் இவர்கள் அனைவரும் இணைந்து இக் குற்றத்தை புரிந்த காரணம் யாதெனில் ஆபாச வீடியோவின் நேரடி காட்சியை (லைவ்) சர்வதேசத்திற்கு விற்பனை செய்தவற்காகும்.
இவ் வழக்கின் ஒன்பதாவது எதிரி தனது மச்சான் உறவினரான 6ஆவது எதிரியுடன் தொடர்பு கொண்டு, சுவிஸ்ஸர்லாந்து நாட்டில் நேரடி ஆபாச பட காட்சிக்கு ஒப்பந்தமொன்று செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சர்வதேச சநதைக்கு தெற்காசிய நாடுகளின் இளம் பெண்களின் நேரடி (லைவ்) வீடியோ தேவையாக இருந்தது. அதனடிப்படையிலேயே சுவிஸ்ஸர்லாந்து குடியுரிமையை பெற்ற ஒன்பதாவது எதிரியுடன் ஒர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
அழகான இளம்பெண்களை கற்பழித்து பின்னர் இவர்களை கொலை செய்து அதனை நேரடியாக ஒளிப்பதிவு செய்வது என்பதுவே இவர்களது திட்டமாக இருந்தது. இது விடயங்கள் அனைத்தையும் இவ் வழக்கின் ஒன்பதாவது எதிரி சிறைக்கூட்டில் அவரோடு சிறையில் இருந்த சகபாடிக்கு கூறியுள்ளார். அத்துடன் ஒன்பதாவது எதிரி இவ் குற்றச் செயலில் இருந்து தப்பிச் செல்வதற்கு பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 20 மில்லியன் ரூபா
வரையில் இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளார். இது தொடர்பான சான்றுகள் வழக்கின் சாட்சிப் பதிவுகளின் போது சமர்பிக்கப்படும்.
மேலும் இவ் வழக்கின் பிணைச் சோதனை அறிக்கை தொடர்பாக பார்க்கின்ற போது குறித்த பெண் உயிரிழந்தமைக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் குறித்த பெண்ணின் பிறப்புறுப்பின் யோனிமடல் அழிவடைந்து பிறப்புறுப்பின் உள்ளேயும் வெளியேயும் பல காயங்கள் காணப்படுவதுடன் இது வன்மையான கூட்டு பாலியல் வல்லுறவினால் ஏற்படுத்தப்பட்டது எனவும் கூறுகின்றது.
யோனிதுவாரத்தினுள் மீண்டும் மீண்டும் ஆணுறுப்பு உட் செலுத்தப்பட்டுள்ளதுடன் 5,6 ஆகிய எதிரிகள் மாறி மாறி தமது செயற்பாட்டை வீடியோ படம் எடுத்து அதனை ஒர் வடிவமாக உருவாக்க முற்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு எடுக்கப்பட்ட தொலைபேசி அழிக்கப்பட்டாலும் வீடியோ படம் விற்பனை செய்யப்பட்டமையை சான்றுகள் மூலம் தெரியப்படுத்த முடியும்.
இதேவேளை இவ் வழக்கினால் வழங்கப்படுகின்ற தீர்ப்பானது குற்றவாளிகளுக்கும், பொது மக்களுக்கும் ஒர் செய்தியை தெரிவிக்கும் எனவும், இவ் நீதிமன்றம் அனைவரது உரிமைகளையும் உரித்துக்களையும் பாதுகாத்து விரைவாக இவ் வழக்கை விசாரணை செய்து நீதியை வழங்கும் என தாம் நம்புவதாகவும் பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டீ லிவேறா தனது ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தார்.