புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பு நிலையத்தின் ஊடாக அமெரிக்க தூதுவராலயத்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த யுவதி ஒருவரின் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று காலை 6.45 மணிக்கும் 7.15 க்கும் இடைப்பட்ட மணிநேரத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் கொள்ளையில் ஈடுபட்ட 23 வயதுடைய இராணுவ வீரரை கைது செய்து அவர் விழுங்கியிருந்த குறித்த யுவதியின் எழுபது ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்டதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொது உறவுகள் ஒழுக்காற்று பிரிவு, ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
கெக்கிராவ சேனபுற பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த இராணுவ வீரர் கட்டுநாயக்க இராணுவ முகாமில் சமிக்ஞை படைப் பிரிவின் கீழ் பணியாற்றி வருவதாகவும் விசாரணைகளில் உறுதியானதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, நீர்கொழும்பில் இருந்து பஸ் வண்டி ஊடாக யுவதி ஒருவர் புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பஸ் நிலையத்தில் வந்து இறங்கியுள்ளார். அமெரிக்க தூதுவராலயத்தில் பணியாற்றும் குறித்த யுவதி பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து தனது கடமைகளுக்காக தூதரகம் நோக்கி செல்ல பிறிதொரு பஸ் வண்டியில் ஏறுவதற்காக தயாராகி பஸ் நிலையம் ஊடாக நடந்து சென்றுள்ளார்.
இதன்போது யுவதியை பின் தொடர்ந்துவந்த இளைஞன் ஒருவன் யுவதியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட ஆரம்பித்துள்ளான். இதன் போது அந்த யுவதி “திருடன் திருடன். சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடுகிறான்.” என கூச்சலிட்டு கத்தியுள்ளார்.
அதன் போது சங்கிலியை பறித்த குறித்த இளைஞனும் “திருடன் திருடன்” என கூச்சலிட்டுக்கொண்டு ஓடியுள்ளான். உடனடியாக பஸ் நிலையத்திலிருந்த பயணிகள், நேர கண்காணிப்பாளர்கள், சாரதிகள், நடத்துநர்கள் என பலர் அந்த இளைஞனை துரத்தியுள்ளனர்.
புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் உள்ள பொலிஸ் காவல் அரணின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நெவில் பிரியந்த உள்ளிட்ட பொலிஸாரும் திருடனை துரத்திச் சென்றுள்ளனர். இந் நிலையில் திடீரென பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் ஒன்றுக்குள் ஏறி உள்ள சந்தேக நபரான இராணுவ வீரர் அங்கிருந்த ஆசனம் ஒன்றில் அமர்ந்து உறங்குவதை போல நடித்துள்ளார்.
திருடனை துரத்தி சென்ற பொலிஸ் பரிசோதகர் நெவில் பிரியந்த அந்த பஸ் வண்டிக்குள் ஏறி உறங்குவதை போல நடித்துக் கொண்டிருந்த திருடனை கைது செய்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபரான இராணுவ வீரர் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர் விழுங்கியிருந்த யுவதியின் தங்க சங்கிலி பொலிஸ்நிலையத்தில் வைத்து மீட்கப் பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை- கொழும்பு பொலிஸ் மா அதிபர் லலித் பதிரன, கொழும்பு மத்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சில்வா ஆகியோரின் மேற்பார்வையில் புறக்கோட்டை பொலிஸார் மேற் கொண்டுள்ளனர்.