ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என்று ஏகபத்தினி விரதனாக வாழ்ந்தவர் ராமபிரான். தனி மனித ஒழுக்கத்தை, தன் வாழ்நாளில் வாழ்ந்து காட்டியவர். பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சம் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் ராமபிரான். இந்த நாளே ராம நவமி என்ற பெயரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற ராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் மகாவிஷ்ணு. ராமாவதாரம் என்ற ஒரு அவதாரத்திலேயே ராமபிரான், குருவிற்கு நல்ல மாணவராக, தாய்-தந்தையருக்கு நல்ல மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, மக்களுக்கு நல்ல மன்னனாக, நண்பர் களுக்கு உற்ற தோழனாக, பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக என்று பல அவதாரங்களை எடுத்து அதில் தன்னை நிலைநிறுத்தியவர்.
அயோத்தியின் அரசரான, தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி என மூன்று மனைவிகள். தனது புஜ, பல பராக்கிரமத்தால் உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டி புகழ்கொடியை பறக்கவிட்ட தசரதருக்கு நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாமல் இருந்தது பெரும் மனக்குறையாக இருந்தது. தனது மனக்குறையை குலக்குரு வசிஷ்டமகரிஷியிடம் அவர் கூறினார்.
வசிஷ்டரின் ஆலோசனைப்படி மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஸ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரர் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தை கொடுத்து அதை மனைவிகளிடம் கொடுக்கும்படி கூறினார். தசரதர் பாயசத்தை தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர். பங்குனிமாதம் நவமியன்று கோசலை ராம பிரானை பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர்.
தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன் வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதிலையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார். கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில் ராமன் வாலியை வதம் செய்து சுக்ரீவன், அனுமன் ஆகியோர் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்து விபிஷணனை இலங்கையின் அரசனாக நியமித்தார்.
பின்னர் அயோத்தி திரும்பி, முடிசூடி நல்ல முறையில் அரசாண்டார். ராமன் பிறந்தகாலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, அதை பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக் கிரகதோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வர்யங்கள் பெருகும்.
விரதம் இருப்பது எப்படி? :
ராமநவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பூஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பூ இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
சாதம், பாயசம், பானகம், வடை, நீர் மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்றைய தினம் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நூல்களை படிப்பதும், பாராயணம் செய்வதுமாக இறை சிந்தனையோடு இருக்க வேண்டும். ராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் விரதம் இருந்து ஸ்ரீராம பிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு, ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும்.
இவ்வாறு வழிபடுவதால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்ப நலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்.
ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்துவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழிந்து அன்பும், அறிவும் உண்டாகும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.