வடக்கு முதலமைச்சருடன் அரசியலை தவிர்த்த இந்திய தூதுவர்!

வடமாகாண முதலமைச்சர் மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

எனினும், இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து பேசுவதை தரன்ஜித் சிங் சந்து தவிர்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், “இந்தியத் தூதுவர் அரசியலில் விவகாரங்கள் தொடர்பில் எதுவும் பேசவில்லை, அவர் பேசுவதற்கும் ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இந்திய தூதுவர் தெரிவித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், பலாலி விமான நிலையம், மற்றும் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, மன்னார் – இராமேஸ்வரம் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பித்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, பொருளாதார ரீதியில் வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் இந்தியத் தூதுவர் உறுதியளித்ததாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளார்.