புதுவிதமான புதையல் கொள்ளையில் மர்ம கும்பல் ! இலங்கையருக்கு ஓர் அறிவித்தல்

இலங்கையில் புதுவிதமாக, மாறுபட்ட ஓர் கொள்ளை நடவடிக்கையில் பல மர்மக் கும்பல்கள் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கொள்ளை நடவடிக்கைகள் புதையல் மற்றும் தங்கம் விற்பனை, முகநூல் நட்பு என்ற இருவகையில் நடைபெற்றுவருவதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

புதையல் மூலம் பெரும்பாலான தங்கம் கிடைத்ததாக செய்திகள் பணம்படைத்தவர்கள் அல்லது வியாபாரிகளுக்கு தொலைபேசி மூலமாக தெரியப்படுத்தப்படும்.

இவ்வாறு தெரிவிப்பவர்கள் தாங்கள் மிகுந்த வறுமையில் வாழ்வதாகவும் அதன் காரணமாக தமக்கு கிடைத்த புதையலை குறிப்பிட்ட ஒரு தொகைக்கு விற்பனை செய்ய முயல்வதாகவும் தெரிவிப்பார்கள்.

அதன் பின்னர் தாம் பேரம் பேசுபவர் ஒப்புக்கொண்ட பின்னர் அவரை நம்பவைப்பதற்காக முதலில் மாதிரிக்கு சிறிய அளவு உண்மையான தங்கத்தினை கொடுப்பார்கள்.

அந்த தங்க மாதிரி மூலம் தாம் போலியல்ல என்று நம்பவைத்ததன் பின்னர், தமது வறுமை நிலையை காரணம் காட்டி தொடர்ந்து பேரம் பேசி போலியான தங்கத்தினை பித்தளையில் உருவாக்கி.,

ஓர் இடத்திற்கு வருமாறு கூறி அதனை கொடுத்து விட்டு பணத்தினை அபகரித்துச் சென்று விடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு 2,3 கிலோகிராம் வரையிலான போலித்தங்கம் பேரம் பேசப்படும்.

அதேபோல, புதையல் மூலமாக தமக்கு தொல்பொருள் சார்ந்த பெறுமதிவாய்ந்த பொருட்கள் கிடைத்ததாகவும் அவற்றை விற்பனை செய்வதாகவும் கூறியும் ஏமாற்றும் செயல்களிலும் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இந்த கொள்ளையில் பலர் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அடிக்கடி இத்தாலி சென்று வரும் இலங்கையின் முக்கிய பிரபலம் ஒருவரும் இதன் மூலம் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அநுராதபுரம், பொலன்னறுவை, மஹியங்கனை, கேகால்லை போன்ற பகுதிகளில் இருந்தே இவ்வாறான கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்புகளை ஏற்படுத்துகின்றார்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அண்மையில் இந்த கொள்ளையில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மற்றொரு வகையில் முகநூல் மூலமாக வெளிநாட்டில் இருந்து நட்பு தொடர்பு கொண்டு அங்கிருந்து பரிசில்கள் அனுப்பிவைப்பதாகவும் முகரியும் பெற்றுக்கொள்ளப்படும்.

நைஜீரியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்தே இவ்வாறு வெளிநாட்டவர் உரையாற்றுவார்கள். ஆங்கிலத்தில் உரையாற்றி நட்புகொள்பவர்களை (இலங்கையரை) நம்பவைத்து விடுவார்கள்.

அதன் பின்னர் தாம் பரிசுப் பொருட்களை அனுப்பிவைத்து விட்டதாக அங்கிருந்து தெரிவிப்பார்கள். அதன் பின்னர் இலங்கை தொலைபேசி இலக்கம் ஒன்றில் இருந்து குறித்த நபருக்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப்பட்டு.

தாம் தபால்பொதி (கொரியர்) நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு பொதிகள் வந்துள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள வேண்டும் எனின் குறித்த தொகை ஒன்று செலுத்தவேண்டும் எனவும் தெரிவிக்கப்படும்.

அவ்வாறு 25000 ஆயிரம் முதல் 35000 ஆயிரம் வரையான கட்டணத் தொகை செலுத்தப்படவேண்டும் எனவும் கூறப்பட்டு அந்தப்பணம் ஏமாற்றப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இலங்கையர்கள் இருக்க வேண்டும் எனவும் நாடு முழுவதும் இவ்வாறான கும்பல்கள் செயற்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.