உமாஓயா திட்டத்தை நிறுத்தாமல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
உமாஓயா திட்டத்தை எமது அரசுதான் ஆரம்பித்தது. உரியவகையில் முன்னெடுக்கப்பட்டது. ஆட்சிமாற்றத்தின் பின்னர் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனால் தான் வெடிப்புகள், ஏனைய பிரச்சினைகள் உருவாகின. பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றிருந்தால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்காது.
எனினும், தற்போது அந்த விடயத்தில் வேறொரு பிரச்சினை புகுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, அரசு அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டினார்.இன்று சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் பயங்கரமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். பேஸ்புக்கூட தடைசெய்யப்படுகின்றது என்றும் இல்லாத வகையில் பிரச்சினைகள் தலைவிரித்தாடுகின்றன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.