டெல்லியை சேர்ந்தவர் ரீடா வர்மா. இவர் கடந்த 25ம் தேதி அரசு வேலையில் சேர்வதற்கான தகுதி தேர்வு எழுத சென்றார். அப்போது பரீட்சை ஹாலில் அவரை தடுத்து நிறுத்திய கண்காணிப்பாளர்கள், அவர் அணிந்திருந்த மெட்டியை கழற்றித் தந்தால் தான் பரீட்சை எழுத அனுமதிப்போம் என்றனர். இதையடுத்து அவர் மெட்டியை கழற்றி விட்டு பரீட்சை எழுதினார்.
இந்நிலையில், தனக்கு நடந்தது குறித்து மனவேதனை அடைந்த ரீடா, இதுதொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி மேனகா காந்திக்கு கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில், ”மெட்டியை கழற்றியதற்காக எனது மாமியார் வீட்டினர், எனது பெற்றோரை கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளனர். மெட்டி உள்பட திருமணம் தொடர்பான பொருட்களை கழற்ற நான் அனுமதித்து இருக்கக்கூடாது என அவர்கள் வாதிட்டனர். ஏனெனில், அவை அனைத்தும் இந்து கலாசாரத்தை வலியுறுத்துபவை. நீங்களே சொல்லுங்கள் நான் என்ன செய்வது? நான் செய்ததில் தவறு இருக்கிறதா?” என குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து, மேனகா காந்தி அந்த கடிதத்தை மத்திய மனிதவள அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். இனிமேல் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் தேர்வு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
சமீபத்தில் நடந்த நீட் தேர்விலும், பரீட்சை எழுத வந்த மாணவ, மாணவியரிடம் தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் கடும் கட்டுப்பாடுகள் விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.