ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதன்காரணமாக நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யவதற்கு வரும் ஜூலை 17 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமார் போட்டியிடுகிறார். இவர்கள் உள்பட 95 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். எனினும் ராம்நாத் கோவிந்த் மற்றும் மீரா குமார் தவிர மற்றவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரத்தை மீராகுமார் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து துவங்குகிறார். நேற்று மாலை குஜராத் சென்ற மீரா குமார் இன்று காலை 9.30 மணி அளவில் சபர்மதி ஆசிரமம் சென்று கட்சி தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து அதன்பின் பிரச்சாரம் செய்வார் என குஜராத் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஹிமான்ஷூ படேல் தெரிவித்துள்ளார்.
இம்முறை நடக்கும் ஜனாதிபதி தேர்தலை ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்களின் போட்டியாக மாற்ற சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் இது சித்தாந்தங்களிடையே நடைபெறும் போட்டி ஆகும். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மகாத்மா காந்தி தனது சித்தாந்தங்களை உலகம் முழுக்க பரப்பினார். இதேபோல் நாமும் சித்தாந்தங்களுக்காக போட்டியிடுகிறோம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக எனது பிரச்சாரத்தை குஜராத் மாநிலத்தில் இருந்து துவங்குகிறேன் என மீரா குமார் தெரிவித்துள்ளார்.