பாங்கொக் – கொழும்புக்கு இடையில் மூன்றாவது தினசரி விமான சேவையை அறிமுகப்படுத்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் தென்னிந்தியா ஆகிய இடங்களின் பயணிகளின் விமான பயணத்தை அதிகரிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பாங்கொக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொழும்பிற்கு வருகை தருவதன் ஊடாக இரண்டு பிராந்தியங்களுக்கு இடையில் விமான சேவைகளை இணைப்பதற்கு காத்திருக்கும் நேரம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதற்கமைய எதிர்வரும் ஜுலை மாதம் 15ஆம் திகதி முதல் மேலதிக சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
தாய்லாந்தின் தலைநகருக்கான பயணத்திற்கு 6-8 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் எதிர்வரும் நாட்களில் அது சுமார் இரண்டு மணி நேரங்களால் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது பாங்கொக் – கொழும்பு வழி ஊடாக இரண்டு சேவைகளில் தொடர்ந்தும் பயணிகள் பயணிக்கின்றனர்.
டுபாய், அபுதாபி, டோஹா, மஸ்கட், டமாம், பஹ்ரைன், ரியாத், குவைத் மற்றும் ஜெட்டா ஆகிய இடங்களுக்கு மிக விரைவான இணைப்புகளை இந்த விமான சேவையின் ஊடாக பயணிகள் அனுபவிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் பெங்ளூர், சென்னை, திருவனந்தபுரம், திருச்சிராப்பள்ளி மற்றும் கொச்சி ஆகிய இடங்களுக்கும் விமான சேவைகளை எளிதாக இணைக்க முடியும் என தாய்லாந்திற்கான விமான சேவை மேலாளரான ரிசா யூசுப் நேற்று தெரிவித்துள்ளார்.
புதிய விமான சேவையின் ஊடாக இலங்கைக்கு வரும் தாய்லாந்து சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.