விக்னேஸ்வரனிடம் இந்திய தூதுவர் கூறியது

வடக்கில் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவத்துக்கிடையில் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்று சிறிலங்காவுக்கான இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தியுள்ளார்.

வடக்கிற்கான முதலாவது பயணத்தை நேற்று மேற்கொண்ட இந்திய தூதுவர் கூட்டம் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கும், பொருளாதார, உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கும் வடக்கில் உள்ள அரசியல் தலைமைத்துவத்துக்கிடையில் ஒற்றுமை முக்கியமானது என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் எண்ணம் தனக்கு கிடையாது என்றும் இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்களின் பின்னணியிலேயே இந்திய தூதுவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

வடக்கிற்கு நேற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய தூதுவர் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல்ட் குரே ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.

எனினும், வடமாகாண முதல்வருடனான சந்திப்பில் அரசியல் விவகாரங்கள் குறித்து பேசுவதற்கு இந்தியத் தூதுவர் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.