11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதி சுற்றுக்கு முன்னேரும்.
இந்நிலையில் டவுன்டானில் இன்று நடைபெற்ற ஏழாவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இத்தொடரின் முதல் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் துவங்கியது.
இன்றைய போட்டியில் முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் துவக்க வீரரான ஹேலெ மேத்யூஸ் 43 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய ஃபெலிசியா வால்டர்ஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை எடுத்தது.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் துவக்க வீரரான பூனம் ரவுத் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடி 106 ரன்களை குவித்தார்.
இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 46 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா 106 ரன்களுடனும், மோனா மெஷ்ராம் 18 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி 42.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற போட்டியில் இலங்கை பெண்கள் அணியை ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்து ஜூலை 2-ந்தேதி நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய பெண்கள் அணி பாகிஸ்தான் அணியுடன் மோத இருக்கிறது