அமைச்சர்கள் இருவரும் பதவியேற்பில் கலந்து கொள்ளவில்லை.

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு மற்றும் இந்தியத் தூதுவருடனான சந்திப்புக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

வடக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு, ஆளுநர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது. கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், மகளிர் விவகாரம், சமூகசேவைகள், மீள்குடியேற்ற அமைச்சுப் பொறுப்புக்களை திருமதி அனந்தி சசிதரனும், கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சுப் பொறுப்பை க.சர்வேஸ்வரனும் நேற்று ஏற்றுக் கொண்டனர்.

வடக்கு மாகாண சபையில் அமைச்சர்களாக உள்ள பா.டெனீஸ்வரன் மற்றும் ப.சத்தியலிங்கம் இருவருக்கும், இந்த அமைச்சுப் பொறுப்பு ஏற்கப்படும் தகவல்கூட தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் நிகழ்வுக்கான அழைப்பும் விடுக்கப்படவில்லை. இதனால் இருவரும் நேற்றைய பதவியேற்பில் கலந்து கொள்ளவில்லை.

யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகை தந்திருந்த, இலங்கைக்கான இந்தியத் தூதுவருடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கைதடியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் புதுமுக அமைச்சர்கள் இருவரும் மாத்திரமே பங்கேற்றனர். பழைய இரு அமைச்சர்களும், முதலமைச்சர் அழைப்பு விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பாகுபாடாக – பாரபட்சமாக நடப்பதாக அமைச்சர் பா.டெனீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். தனக்கு ஆதரவளித்த 14 பேருடன் மாத்திரம் கலந்துரையாடல் நடத்திய முதலமைச்சர், ஆளும் கட்சியை பிளவுபடுத்தி வைத்திருக்கவே இப்படிச் செய்கின்றாரா என்று எண்ணத் தோன்றுவதாகவும் குறிப்பிட்டார். ஆளும் கட்சியில் ஒரு தரப்பினருடன் மாத்திரம் கலந்துரையாடல் நடத்துவதெல்லாம் பாரபட்சமான செயற்பாடு எனவும் அவர் தெரிவித்தார்.