மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் சொந்த ஊர் ராமேசுவரம் ஆகும். அவர் மறைந்த பின்பு, அவரது உடல் ராமேசுவரத்தில் உள்ள பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு மத்திய அரசு சார்பில் ரூ. 50 கோடி செலவில் மணிமண்டபமும், அறிவுசார் மையமும் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்தப்பணியை, கடந்த ஆண்டு மத்திய மந்திரிகள் மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.அதில் முதற்கட்டமாக ரூ. 15 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த மணி மண்டபத்தை பிரதமர் மோடி வருகிற 27-ந் திகதி திறந்து வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகள் நேற்று பேக்கரும்பில் உள்ள மணிமண்டபம், ராமேசுவரம் கோவில், பாம்பன் பாலம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தனர்.