பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச்செல்ல ஸ்ரீலங்காவிற்கு உரித்தான சீர்த்திருத்தங்கள் உலக வங்கியின் அறிக்கையில் முக்கிய இடம்பெற்றுள்ளன.
அந்தவகையில், போட்டித்தன்மையை மேம்படுத்துதல், விரிநிலை பொருளாதார- நிதியியல் ஸ்திரத்தன்மையைப் பேணுதல் மற்றும் நிறுவனங்களை வலுப்படுத்துதல் போன்ற விடயங்களில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தால் வழிநடத்தப்படுகின்ற மறுசீரமைப்புக்கள் வலுவான பொருளாதார வளர்ச்சி,தொழில்வாய்ப்புக்களை உருவாக்குதல் மற்றும் வறுமை குறைப்பு ஆகியவற்றிற்கு முக்கியமானது.
இந்த முன்னுரிமையான விடயங்கள் உலக வங்கியின் ஸ்ரீலங்கா அபிவிருத்தி நடப்பு நிலவர அறிக்கையானது கோடிட்டுக் காட்டுகின்றது.
இதேவேளை, இது தொடர்பில் கருத்து வெளியிட்ட உலக வங்கியின் ஸ்ரீலங்காவிற்கான வதிவிடப் பணிப்பாளர் ஐடா சுவராயி ரிடிஹோஃப், ” ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முயற்சிகள், வளர்ச்சி செயற்திறனை வலுப்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், மோசமான காலநிலை உட்பட ஏனைய காரணிகள் வரவுசெலவுத்திட்டத்தின் நேர்த்தியான நடைமுறைக்கிடலுக்கு தடங்கலை உண்டுபண்ணி பொருளாதார வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி செயற்திறனைப் பாதித்தது,” என தெரிவித்துள்ளார்.
”நிர்மாணத்துறை மற்றும் நிதியியல், சேவைத் துறைகளில் இருந்து கிடைக்கப்பெற்ற வலுவான பங்களிப்புக்கள் நல்ல அறிகுறிகளாகக் காணப்படும் அதேவேளை போதிய அளவு வருமானங்களை அதிகரிப்பதற்கும் நாட்டு மக்களுக்கு அதிகப்படியான மற்றும் சிறப்பான தொழில்களை வழங்குவதற்கும் இலங்கை அதன் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவேண்டியது அவசியமாகும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் நெகிழ்திறனை கட்டியெழுப்புதவற்கு ஆவண செய்தல் வேண்டும் போன்ற பரிந்துரைகள் அறிக்கையில் உள்ளன.
அதற்கு மேலதீகமாக பொதுக் கடனை நிலையான பாதையை நோக்கி கொண்டுவருவதற்கு தற்போதுள்ள செலவீனத்தை கட்டுப்படுத்தும் அதேவேளை மேலும் அதிகமான வருமானத்தை திரட்ட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய உள்நாட்டு வருமானச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தலானது நல்லதோர் ஆரம்பமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டமைக்கப்பட்ட வருமான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தலில் காணப்படும் தாமதங்கள், வரி நிர்வாகத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மெதுவான முன்னேற்றம், மிகக் குறைவான அனுகூலமே காணப்படும் உலகப் பொருளாதார வளர்ச்சி , எதிர்பார்க்கப்பட்டதை விட வேகமாக உலக சந்தையில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றமை ஆகியன இந்த அறிக்கையில் அபாயங்களாக இனங்காணப்பட்டுள்ளன.
இதேவேளை, உலக வங்கியின் இலங்கைக்கான சிரேஸ்ட பொருளியலாளர் ரால்ஃப் வான் டூர்ன் “வர்த்தகத்திற்கு இசைவாக திறந்துவிடுவதன் மூலமும் பொருளாதாரத்தை பல்துறைகளில் விரிவாக்குதன் மூலமும் வளர்ச்சிக்கான புதிய மூலங்களை நோக்கி நகர்வதற்கும் தொழில்களை உருவாக்குதற்கும் இலங்கைக்கு சந்தர்ப்பம் கிட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஏற்றுமதியையும் நிதி வருமானத்தை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் வறியவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கும் பொருளாதாரத்தை சரிசெய்வதற்குமான வாய்ப்பை வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.