ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால் ஜெயலலிதா மறைவாலும், கருணாநிதி வயது முதிர்வாலும் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பி மக்கள் செல்வாக்கை பெற்றுவிட முடியும் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகிறார்கள்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரது முதல் அறிவிப்பே ஊழல் ஒழிப்பாகத்தான் இருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ரசிகர்களை சென்னையில் சந்தித்தபோது நான் அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்று பிரகடனப்படுத்தியதையும் அவர்கள் நினைவுபடுத்துகின்றனர்.
மாநில அரசியலையும், தேசிய அரசியலையும் தெளிவாக தெரிந்து வைத்து இருக்கிறார் என்பதும் அரசியலில் ஈடுபட்டால் மக்களை கவரும் கொள்கை திட்டங்களை அறிவித்து அவர்களை தன் பக்கம் எளிதாக இழுத்து விடுவார் என்பதும் அவரை சந்தித்தவர்கள் கருத்தாக உள்ளது.
எதிர்ப்பாளர்களோ ரஜினியின் அரசியல் காலம் முடிந்து விட்டது என்கின்றனர். ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க.-த.மா.கா கூட்டணியை உருவாக்கிய நேரத்தில் புதிய கட்சி துவங்கி அரசியலுக்கு வந்து இருந்தால் அமோக வரவேற்பு கிடைத்து இருக்கும் என்றும், இப்போது அவருக்கு ஆதரவு இல்லை என்றும் கூறுகிறார்கள்.
காவிரி விவகாரம், ஈழத்தமிழர்கள், இந்தி மொழி திணிப்பு பிரச்சினைகளில் ரஜினிகாந்த் கொள்கைகள் உறுதியாக இல்லை என்றும் அவர்கள் விமர்சிக்கின்றனர்.
எனவே அரசியல் குறித்து ரஜினிகாந்த் என்ன முடிவு எடுப்பார் என்பதில் மர்மம் நீடிக்கிறது. அரசியலுக்கு வருவது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கும் அவர் நண்பர்கள், அரசியல் கட்சி நடத்தும் நடிகர்கள், பத்திரிகையாளர்கள் போன்றோரிடம் கருத்து கேட்டு வருகிறார். இந்தி நடிகர் அமிதாப்பச்சனிடமும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இருவரும் நெருங்கிய நண்பர்கள். 1991-ம் ஆண்டு வெளியான ‘ஹம்’ இந்தி படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அமிதாப்பச்சனுக்கு திடீர் அரசியல் ஆசை ஏற்பட்டு 1984-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அலகாபாத் பாராளுமன்ற தொகுதியில் உத்தரபிரதேச முன்னாள் முதல் மந்திரி பகுகுனாவை எதிர்த்து போட்டியிட்டு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார். அதன்பிறகு போபர்ஸ் ஊழல் வழக்கில் தனது பெயர் அடிபட்டதால் அரசியலை விட்டு விலகி மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து விட்டார்.
ரஜினிகாந்துக்கு அரசியல் குறித்து அவர் பல ஆலோசனைகள் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் ரஜினிகாந்த் உடல்நிலையை கருதி அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.