‘வெள்ளைத் தங்கம்’ உப்பு

ருசியான சமையலுக்கு உப்பு அவசியம். உயிர்கள் முதலில் தோன்றியது உப்பு நீரில் இருந்துதான் என்பது விஞ்ஞானத்தின் ஒரு கருத்து. உயிர்கள் கடலைவிட்டு, நிலத்துக்கு வந்த பின்னும் அவற்றின் வளர்ச்சிக்கு உப்பு முக்கியமாகிவிட்டது. அதனால்தான் நாம் இன்றும் உப்பை பயன்படுத்தி வருகிறோம். உப்பு பற்றிய சில ருசியான சங்கதிகளை ருசிப்போம்…

* உண்மையில், உப்பு இல்லாவிட்டால் உயிர் வாழ்க்கையே இல்லை. 40 சதவீதம் சோடியமும், 60 சதவீதம் குளோரினும் அடங்கிய கலவைதான் ‘உப்பு’. ‘நான் உப்பு சேர்ப்பது இல்லையே’ என்று நீங்கள் கூறினாலும் உங்கள் உடலில் மாற்று வழியில் உப்பு சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ‘மினரல் வாட்டர்’ எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரில் கலக்கப்படுவது உடலுக்கு அவசியமான தாது உப்புக்களே.

* உறுதியற்ற தாதுவான சோடியம், குளோரின் வாயுவுடன் இணைந்து உருவாவதே ‘சோடியும் குளோரைடு’ எனப்படும் சமையல் உப்பாகும்.

* உப்பு உடலுக்கு மிக அவசியமான தாதுவாகும். அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் உப்புகள் அதிகமாக வெளியேற்றப்பட வாய்ப்பு உண்டு. அதிகமாக உப்பு உடலில் சேர்ந்தாலும் ஆபத்தானதாகும். அதனால்தான் அளவுக்கு அதிகமான உப்பு, கண்ணீர், வியர்வை, சிறுநீர், மலம் போன்ற வழிகளில் வெளியேறுகிறது.

* தரமான கடல் உப்பு உடலுக்கு அவசியமான பல தாதுக்களைக் கொண்டுள்ளது. உலர்த்தப்படும் முன்பு, சிறிது ஈரப்பதத்துடன் காணப்படும் கடல் உப்பே மிகவும் தரமானது என்கிறார்கள் நிபுணர்கள்.

* மூளை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு நரம்பு செயல்கடத்தும் திறனுக்கு அத்தியாவசியமானது உப்பில் உள்ள சோடியம் தாது.

* உணவு செரிக்கவும், நரம்புகளின் செயல்திறனை அதிகரிக்கவும் உப்பு உதவுகிறது. உமிழ்நீர் நன்றாக சுரக்க உப்பு துணை செய்யும். உப்புதான் உடலின் நீரோட்டத்தையும் ரத்த ஓட்டத்தையும் ஒழுங்குபடுத்துகிறது. உயிரணுக்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் உப்பு உதவுகிறது. உடல் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் இது தேவைப்படுகிறது. நமது உடல் சுரக்கும் சில நீர்களிலும் ரத்தத்திலும் உப்பு கலந்திருக்கிறது.

* பல மங்கல நிகழ்வுகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது இந்த உப்பு ஆகும். குறிப்பாக புதுமனை புகும் பொழுது முதலில் வீட்டுக்குள் கொண்டு செல்லப்படுபவை உப்பும், மஞ்சளும் ஆகும். திருமணச் சடங்கு முதற்கொண்டு இறுதிச் சடங்கு வரையில் உப்புதான் இன்றியமையாத பொருளாகத் திகழ்கின்றது. உண்ணும் உணவிலிருந்து இன்னும் பிற உணவுப் பண்டங்கள் வரையில் சுவை கொடுப்பது உப்புதான்.

* உணவில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்து உண்டால் அது உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றிற்கு எளிதாக வழிவகுக்கும். உணவில் உப்பு குறைவாக இருந்தாலும் குறைந்த ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றிற்கு அடிகோலும். இதைத்தான் ‘மிகினும் குறையினும் நோயே’ என்றனர் பெரியோர்.

* ஒரு கிலோ எடைக்கு, ஒரு கிராம் உப்பு போதுமானதாகும். எனவே உங்கள் உடல் உடைக்கு ஏற்ற கிராம் அளவுக்கு மேல் உப்பு சாப்பிட்டால் விபரீதங்கள் ஏற்படலாம்.

* கறுப்பு உப்பை தயாரித்தவர்கள் இந்தியர்களாவர். உப்புடன், சில தானிய விதைகளை சேர்த்து கறுப்பு உப்பு தயாரிக்கப்படுகிறது. இது சற்று சிவந்த நிறத்துடனே காணப்படும். இப்போது ரசாயன சாயம் கலந்த கறுப்பு உப்பும் சந்தைக்கு வருகின்றன.

* ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’, ‘ உப்பில்லாப் பண்டம் குப்பையிலே‘ என உப்பின் சிறப்பினை உணர்ந்த நம் முன்னோர் பொன்மொழி புனைந்துள்ளனர்.

* அமெரிக்காவில் சமையலுக்குப் பயன்படுத்துவதைவிட 3 மடங்கு அதிகமான உப்பை, சாலை பராமரிப்புக்கு பயன்படுத்துகிறார்கள். குளிர்காலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் அதிகம் பனி படர்ந்துவிடாமல் தடுப்பதற்காக இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.