நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை அவரது குடும்பத்தார் தடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா இல்லாத களத்தில், எளிதாக ஸ்டாலினுக்கு போட்டியாக உருவாகலாம் என நினைக்கும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர ஆர்வமாக உள்ளார்.
இதற்காக அரசியல் பேச்சுக்களை பேசி கல்லெறிந்து பார்த்தார். ரிசல்ட் எப்படி வருகிறது என்பதை பார்த்து அரசியலில் குதிக்கலாம் என்பது அவரது திட்டம். அவர் எதிர்பாத்ததை போலவே ஊடகங்களில் விவாதப்பொருளானது அவரது பேச்சு.
ரஜினிகாந்த் கடந்த மாதம் ரசிகர்களைச் சந்தித்தபோது அவர் கூறிய கருத்துகளால் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கலந்து வருகின்றன. இதனால், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து தனது நண்பர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள், சினிமா நடிகர்கள் என பலரிடம் ஆலோசனை கேட்டு வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தனது நண்பரும் நடிகருமான் அமிதாப்பச்சனிடம் ரஜினிகாந்த் ஆலோசனை கேட்டு உள்ளார். மும்பையில் திரைப்பட சூட்டிங்கில் பங்கேற்றபோது, இதுகுறித்த ஆலோசனைகளை நடத்தியதாக கூறப்புடகிறது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பல ஆலோசனைகளை அமிதாப்பச்சன் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வர பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும். அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆதரவு அளிக்கவில்லையாம்.
ரஜினிகாந்த் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமோடு திரும்பினார். இதனால் அதிக உடலுழைப்பில் ஈடுபட முடியாத சூழ்நிலையில் உள்ளார்.
இப்போது திரைப்பட சூட்டிங்குகளில் பிஸியாக உள்ளதால், அவரது உடல்நிலையில் சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று அவரது குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.