நாகர்கோவில் கோட்டார் வாகையடி தெற்கு ரத வீதியில் வீரசைவ சமுதாய சித்தி விநாயகர் மற்றும் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் 400 ஆண்டு பழமை வாய்ந்த கோவில் ஆகும்.
இந்த கோவில் திருப்பணிகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் தொடங்கியது. காலையில் விஜயகணபதி ஹோமம், கோபூஜை, மகா தீபாராதனை ஆகியவை நடந்தது. அதைத்தொடர்ந்து யானைகள், குதிரைகள் புடைசூழ மேளதாளங்கள் முழங்க கரியமாணிக்கபுரம் முப்பிடாரி அம்மன் கோவில் திருசுனையிலிருந்து புனிதநீர் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. மாலை திருமுறை பாராயணம், இரவு முதல் கால யாகசாலை பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 2-ம் கால யாக பூஜை உள்பட பல்வேறு பூஜைகளும் மகா தீபாராதனையும் நடந்தது. இரவு 3-ம் கால யாகசாலை பூஜை, சோம கலச பூஜைகள் நடைபெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு பிம்பசுத்தி, பிம்பரக்ஷா பந்தனம், 4-ம் கால யாக சாலை பூஜைகள் தொடங்கியது. யாகசாலை பூஜைகள் முடிந்ததும் 9.25 மணிக்கு கோவில் நூதன ராஜகோபுரம், விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சித்தி விநாயகர், உஜ்ஜயினி மாகாளி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவுக்கு தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாரிய சுவாமி, வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமம் கருணானந்தஜி மகராஜ், மேற்கு நெய்யூர் ராமகிருஷ்ணா சாரதா சுவாமிகள் ஆசிரமம் ராமகிருஷ்ணானந்தஜி மகராஜ், சென்னை அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபை குருஷேத்திரம் சாது கிருஷ்ணானந்தம் சுவாமி ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திருப்பதிசாரம் சங்கர பட்டர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கிறார். மதியம் 12 மணிக்கு மகேஸ்வர பூஜையும், அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது.
மாலை 5.30 மணிக்கு வள்ளி-தெய்வானை உடனுறை கல்யாண முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 6.30 மணிக்கு அனைத்து மூலஸ்தான மூர்த்திகளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேஷ பூஜை, தீபாராதனை காட்டப்படுகிறது. பரத நாட்டிய நிகழ்ச்சி, சினிமா பட மெல்லிசை கச்சேரி ஆகியவை நடைபெறுகிறது.
கும்பாபிஷேகம் முடிந்ததும், 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழு தலைவர் மாரிமுத்து என்ற சங்கர், செயலாளர் நாகராஜன், பொருளாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் சொரிமுத்து, வேலுப்பிள்ளை, அய்யப்பன், பாண்டுரங்கன், தாணுமூர்த்தி, கிருஷ்ணன், கோபாலன், முருகன், சண்முக சுந்தரம், சிதம்பர தாணு என்ற முருகன், அசோகன், நீலகண்டன், சுடலையாண்டி மற்றும் திருப்பணிக்குழு உறுப்பினர்கள், வீர சைவ சமுதாய மக்கள் செய்து வருகிறார்கள்.