தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தை பற்றி வணிகர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த மாநில அளவில், மீன்வளம், நிதி மற்றும் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ஆகியோர் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் கடந்த 28-ந் தேதியன்று சென்னையில் நடத்தப்பெற்று, வணிகர்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு துறை சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஒவ்வொரு வரி விதிப்பு வட்டத்திலும் குறைந்தபட்சம் தலா 2 கருத்தரங்குகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு சுமார் 650 கருத்தரங்குகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதைப்போன்று, வணிக வரி மாவட்ட அளவிலும் கருத்தரங்குகள் மூலம் வணிகர்களின் சந்தேகங்களை களைய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், ஒவ்வொரு வணிக வரி வட்டத்தில் உதவி மையமும், வணிக வரி மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை அணுகி வணிகர்கள் சரக்கு மற்றும் சேவைகள் வரிச்சட்டத்தின் கீழான சந்தேகங்களுக்கு தெளிவுரைகள் பெற்று சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வணிகர்களுக்கு அவ்வப்போது எழும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய ஜி.எஸ்.டி.ல் நேரடியாக இணைக்கப்பெற்ற கட்டணமில்லா தொலைபேசி (01204888999) மற்றும் வணிக வரித்துறையின் உதவித் தொலைபேசி (18001036751) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து வணிக வரி அலுவலர்களுக்கும் ஜி.எஸ்.டி. சட்டம் மற்றும் ஜி.எஸ்.டி.என். இணையதள மென்பொருள் பயன்பாடு தொடர்பாக விரிவான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியினை மேலும் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி. அமலாக்கத்தின்போது சுமுகமான முறையில் வணிகர்கள் புதிய வரி முறைக்கு மாறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறும் வணிகர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யுமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஆறரை லட்சத்துக்கும் மேல் பதிவு பெற்ற வணிகர்களில் 91 சதவீத ஜி.எஸ்.டி. வலைதளத்தில் பதிவு மாற்றம் பெற விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு தற்காலிக ஜி.எஸ்.டி. ஐ.என். (புரொவிஷனல் ஐ.டி.) அளிக்கப்பட்டுள்ளது.
இதை பயன்படுத்தி 3 மாதங்கள் வரை தங்கு தடையின்றி வணிகம் செய்யலாம். மேலும், மத்திய சரக்குகள் மற்றும் சேவைகள் வரித்துறை மூலமாக விரிவான ஏற்பாடுகள் மத்திய அரசால் செய்யப்பட்டுள்ளது. இவ்வரலாற்று சிறப்புமிக்க வரி சீர்திருத்தத்தில் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.